சென்னை: “சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. அவ்வாறு வந்த செய்திகள் தவறானது. இன்னும் சொல்லப்போனால் அது பொய்யானது. அது நூறு விழுக்காடு அல்ல, ஒரு லட்சம் மடங்கு பொய்யானவை” என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “2017-ல் நான் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐஜியாக இருக்கிறேன். பணியில் இருந்த போலீஸார் துப்பாக்கி முனையில் சிலை கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், 47 பக்க ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை கொடுத்தவர்தான் டிஎஸ்பி அசோக் நடராஜன். என்னிடம் பணியாற்றிய காலத்தில் அவர் ஒரு நேர்மையான அதிகாரி. அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் கஷ்டப்பட்டு வேலை பார்த்ததில், அவர் ரொம்ப முக்கியமானவர்.
அவர் என்ன அறிக்கை சமர்ப்பித்தாரோ, அதுவே முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்டது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் என்ன முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டதோ, அதையே சிபிஐ மறுப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் நீதிமன்ற தீர்ப்பை இணைத்துள்ளனர். அப்படியிருக்கும்போது, குற்றவாளிப் பட்டியலில் டிஎஸ்பி அசோக் நடராஜன் பெயரோ, என்னுடைய பெயரோ தெய்வ சத்தியமாக இல்லை. அவ்வாறு வந்த செய்திகள் தவறானது. இன்னும் சொல்லப் போனால் அது பொய்யானது. அது நூறு விழுக்காடு அல்ல, ஒரு லட்சம் மடங்கு பொய்யானவை.
சுபாஷ் கபூர், தீனதயாளன் ஆகியோரை நான் விட்டுவிட்டதாக குறை கூறுகின்றனர். 58 ஆண்டுகளாக கைது செய்யப்படாமல் இருந்த தீனதயாளனை முதன்முதலில் கைது செய்தது நான். என்னை அவரை விட்டுவிட்டதா கூறுவது நியாயமா? அவரை கைது செய்யும் 813 தெய்வ விகரங்களை அவரது வீட்டிலிருந்து எடுத்தேன். பல்வேறு வழக்குகளில் தீனதயாளனை சாட்சியமாக சேர்த்துள்ளேன்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, திருநெல்வேலி பழவூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனை தப்பிக்க வைக்கவே, அவருடன் சேர்ந்து தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், அவர் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஎஸ்பி காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விரைவில் பொன்.மாணிக்கவேலுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக கோரவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.