சிட்னி,
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப் 1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து (7 புள்ளி), இங்கிலாந்து (7 புள்ளி), குரூப் 2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா (8 புள்ளி), பாகிஸ்தான் (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. குரூப்1ல் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகள் பெற்ற போதிலும் ரன்ரேட்டில் பின்தங்கியதால் வெளியேற நேரிட்டது.
இந்த நிலையில் சிட்னியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானுடன் மோதுகிறது.
சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து அணிகளை வீழ்த்திய நியூசிலாந்து, இங்கிலாந்திடம் மட்டும் தோற்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணிக்கு, அந்த கனவை அடைய கடுமையாக போராடும்.
அதே சமயம் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்தியா, ஜிம்பாப்வேயிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவி, அதன் பிறகு நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேச அணிகளை சாய்த்து சரிவில் இருந்து மீண்டது. நெதர்லாந்து அணி தனது கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியதன் பலன் பாகிஸ்தானுக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்தது.
இந்நிலையில், இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.