காங்கிரஸின் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. இமாச்சல் பிரதேச மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தின் போது கூறினார்.
இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று 3 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். காலையில் காங்க்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு சுஜன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்த துரோகம் மற்றும் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இமாச்சல் மக்கள். அதேசமயம் இமாச்சல் பிரதேசத்தில் வீடு, வீடாக சென்று அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இமாச்சல் பிரதேச மக்கள் காங்கிரசை நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் இமாச்சல் மற்றும் அதன் மக்களைப்பற்றி கவலைப்படவில்லை. காங்கிரஸின் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்ட பகுதி அங்கிருந்து தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. பொய்யான வாக்குறுதிகள் மற்றும் பொய்யான உத்தரவாதங்களின் வரலாறு காங்கிரசுக்கு உண்டு.
காங்கிரஸ் அரசின் ஆட்சியில் நமது ராணுவ வீரர்களிடம் போதிய குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் இல்லை. அதே போல் காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு பனியில் அணிய நல்ல காலணிகள் கூட இல்லை. இமாச்சல் பிரதேச மக்கள், நாடு முழுவதும் உள்ள மக்கள் பாரதிய ஜனதா கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி மீதான நாட்டின் இந்த நம்பிக்கை வலுபெற்று வருகிறது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தான் நாட்டின் சில மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் முடிவுகள் வந்தன. பாரதிய ஜனதா கட்சி பலவீனமாக கருதப்பட்ட பல இடங்களிலும் தாமரை வலுப்பெற்று உள்ளது. வீடு வீடாக கழிவறை கட்டுவது பா.ஜ.க. அரசுதான். ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம் கொடுப்பதும் பா.ஜ.க.தான். வீட்டுக்கு வீடு தண்ணீர் வசதி, கொரோனாவின் இக்கட்டான நேரத்தில் அனைத்து ஏழைகளுக்கும் இலவச உணவு தானியங்கள் வழங்கியது பா.ஜ.க. அரசு தான்’’ என தெரிவித்தார்.
– விக்னேஷ்முத்து
இதையும் படியுங்கள் – 1921 முதல் 2022 வரை.. இட ஒதுக்கீடு போராட்டம் கடந்து வந்த பாதை ! – தமிழகமும், இந்தியாவும்!!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM