திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் ஒரு வாரத்துக்கு மேலாக குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சுற்றுவட்டாரத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழை காரணமாக நசரத்பேட்டை யமுனா நகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இன்னும் மழைநீர் வடியாததால் பொதுமக்கள் முகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட மிதந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், அடுத்த சில தினங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் நிலைமை இன்னும் மோசமாக கூடும் என அப்பகுதியினர் அச்சம் தெரிவித்தனர். எனவே, தண்ணீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே யமுனா நகர் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும், விரைவில் மோட்டார் வைத்து தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்துள்ளார். நசரத்பேட்டை ஊராட்சி மன்ற தலைவரும் துரித நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.