செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, கிணறு உள்ளிட்ட நீர்நிலைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை காலங்களில் செங்கல்பட்டு அருகே மகாலட்சுமி நகரில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்குவது வழக்கம். வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவிப்பார்கள். மேலும் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்படும்போதும் இப்பகுதி பாதிக்கப்படும்.
மேலும் கொளவாய் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் வாலாஜாபாத் அருகே தெள்ளிமேடு ஏரியில் இருந்து வெளியேரும் உபரிநீரும் களத்தூரான் கால்வாய் வழியாக சென்று மாமல்லபுரம் அருகே வீணாக கடலில் கலப்பது வழக்கம். தற்போது களத்தூரான் கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. அதனால் செங்கல்பட்டு புறவழிசாலையில் உள்ள நீஞ்சல் மதகு நிரம்பியது. அதே நேரத்தில் மகாலட்சுமி நகரில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்காமல் இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீஞ்சல் மதகு திறந்து விடப்பட்டு தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் செங்கல்பட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மழைகாலங்களில் ஏரிகள் நிரம்பும்போது திறந்து விடப்படுகிறது. அதனால் உபரிநீரை தேக்க சிறுசிறு அணைகள் கட்டினால் தண்ணீரை தேக்கி வைக்கலாம். அதன் மூலம் கோடைக்காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. நீஞ்சல் மதகு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அவற்றை தேக்கி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.