“கோயில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
திருச்செந்தூரைச் சேர்ந்த சீதாராமன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த பொதுநல மனுவில், “கோயில் சிலைகள் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களால் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது. சில கோயில்களில் சிலைகள் திருடு போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக சாமிக்கு அபிஷேகம் செய்யும்போது செல்போன்களைப் பயன்படுத்துவது, சிலைகள் முன் நின்று செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, கோயிலின் உள்ளே செல்போன் பயன்பாட்டுக்குத் தடைவிதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு இன்று விசாரித்தபோது, “கோயில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவர்களுடைய தனிப்பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் சத்திரமா?
திருப்பதி கோயிலின் வாசலில்கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். கோயில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோயில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
திருச்செந்தூர் கோயில் உள்ளே செல்போன் பயன்பாட்டுக்கு உடனடியாக தடைவிதிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது. திருச்செந்தூர் கோயிலின் உள்ளே அர்ச்சகர் உட்பட யாருக்கும் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. திருச்செந்தூர் கோயில் உள்ளே செல்போன் பயன்படுத்தினால் அதை பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்கக்கூடாது.
கோயிலின் வாசலிலேயே செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்தே அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும்.
கோயிலின் உள்ளே செல்போன் கொண்டு செல்வது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலே குறிப்பிட்டிருக்கும் உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை ஆணையர் அனுப்ப வேண்டும். இந்தச் சுற்றறிக்கையின் நகலை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.