சிட்னி: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றது. இதன்மூலம் வரும் நவ.,13ல் நடக்க உள்ள பைனலுக்கு அந்த அணி தகுதிப்பெற்றது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதன் முதலாவது அரையிறுதி போட்டி சிட்னியில் இன்று (நவ.,9) துவங்கியது. இதில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, துவக்க வீரர்கள் ஆலன் (4) , கான்வே (21) அடுத்து வந்த பிலிப்ஸ் (6) விரைவாக வெளியேறினர். கேப்டன் வில்லியம்சன் மற்றும் மிட்செல் ஜோடி ஓரளவு நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தியது.
அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில்லியம்சன் 46 ரன்னில் போல்டானார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. மிட்செல் 53 ரன்கள், நீசம் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்., முகமது நவாஸ் ஒரு விக்., வீழ்த்தினர். பின்னர் 153 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான், பாபர் அசாம் ஜோடி துவக்கம் தந்தது.
முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கியது. அரைசதம் கடந்த கேப்டன் பாபர் 53 ரன்னில் வெளியேறினார். மற்றொரு துவக்க வீரரான ரிஸ்வானும் தன் பங்கிற்கு அரைசதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார். பாக்., வெற்றியை நெருங்கும் நேரத்தில் முகமது ஹாரிஸ் (30) கேட்சானார்.
கடைசி ஓவரில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் பந்தில் ‘வைடு’ மூலம் ஒரு ரன் கிடைத்தது. பின்னர் வீசிய முதல் பந்தில் ‘சிங்கிள்’ அடித்து வெற்றிப்பெற்றது. 19.1 ஓவர் முடிவில் பாக்., அணி 3 விக்., இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த வெற்றியின் மூலம் நவ.,13ல் நடக்க உள்ள டி20 உலக கோப்பை பைனலுக்கு பாகிஸ்தான் அணி தகுதிப்பெற்றது. நாளை (நவ.,10) நடக்க உள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இதில் வெல்லும் அணியை பாக்., பைனலில் எதிர்கொள்ளும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement