முன்னாள் முதல்வரின் செயலாளர் மகன் மீது வழக்குப்பதிவு – ரூ.14.23 கோடி சொத்துக்கள் முடக்கம்

முன்னாள் டிஜிபியின் மனைவி மற்றும் முன்னாள் முதலமைச்சரின் செயலாளராக இருந்தவரின் மகனுக்கு சொந்தமான 14.23 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அப்போது வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி, நிலம் ஒதுக்கீடு பெறப்பட்ட முன்னாள் டிஜிபி ஜாபர் சேட், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் மற்றும் முறைகேடாக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தில் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்ய உடந்தையாக இருந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் உதயகுமார் ஆகியோர்மீது வழக்குத்தொடர்ந்தனர்.
முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் தனக்கு முறைகேடாக ஒதுக்கிய நிலத்தை மனைவி பர்வீன் மீது எழுதிய காரணத்தினால் அவரையும் இந்த வழக்கில் சேர்த்தனர். மேலும் அப்போதைய வீட்டு வசதி வாரியத்தின் செயல் பொறியாளர் முருகையா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கம் ஆகிய ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்தது.
image
இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மற்றும் திமுக அமைச்சரான ஐ பெரியசாமி ஆகியோரை சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வந்தது. முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தின் மூலம் குடியிருப்புகளைக்கட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்த விவகாரத்தில் 14.86 கோடி ரூபாய் சம்பாதித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் முறைகேடாக ஒதுக்கப்பட்ட நிலத்தை மனைவி பர்வீன்மீது எழுதிவைத்ததன் காரணமாக, அவர் பெயரிலும் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் பெயரிலும் உள்ள 14 புள்ளி 23 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.