காதலனுக்கு ஜூஸில் 50 டோலோ மாத்திரைகளை கலந்துகொடுத்த கிரீஷ்மா; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கேரள மாநிலம், பாறசாலையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் அவர் காதலி கிரீஷ்மாவை கஸ்டடியில் எடுத்து திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 நாள்கள் போலீஸ் காவல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கிரீஷ்மாவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ஷாரோன் பி.எஸ்.சி படித்துவந்த திங்கள்நகரை அடுத்த நெய்யூரில் உள்ள கல்லூரிக்கு கிரீஷ்மாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கிரீஷ்மா படித்துவந்த திருவிதாங்கோட்டில் உள்ள கலை கல்லூரிக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கறுப்பு நிற சுடிதார் அணிந்து வந்த கிரீஷ்மா துப்பட்டாவால் தலை, முகத்தை மறைத்தபடி போலீஸாருடன் விசாரணைக்கு வந்திருந்தார். கிரீஷ்மா ஜூஸ் சாலஞ்ச் நடத்தி ஷாரோனுடன் சேர்ந்து வீடியோ எடுத்த குழித்துறை பழைய பாலம் பகுதியிலும், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், அவர்கள் ஜோடியாகச் சுற்றித் திரிந்த இடங்களுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.

ஜூஸ் கடையில் கிரீஷ்மாவிடம் விசாரணை

ஷாரோனுக்கு கஷாயத்தில் பூச்சிமருந்து கலந்துகொடுப்பதற்கு முன்னதாகவே ஜூஸில் டோலோ மாத்திரைகளை கலந்துகொடுத்ததாக கிரீஷ்மா இந்த விசாரணையின்போது தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி அழகியமண்டபத்தில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் காய்ச்சலுக்கு கொடுக்கும் 50 டோலோ மாத்திரைகளை வாங்கி தண்ணீரில் ஊறவைத்து பொடித்து வைத்திருக்கிறார். மறுநாளான ஆகஸ்ட் 22-ம் தேதி நெய்யூரில் ஷாரோன்ராஜ் படித்துவந்த கல்லூரிக்கு அவருடன் பைக்கில் சென்றிருக்கிறார் கிரீஷ்மா. பின்னர் ஒரு லிட்டர் ஜூஸ்பாட்டில்கள் இரண்டை வாங்கிய கிரீஷ்மா கல்லூரி கழிவறைக்குச் சென்று ஏற்கெனவே தயாராக வைத்திருந்த டோலோ மாத்திரை பொடியை ஜூஸில் கலந்திருக்கிறார்.

போலீஸ் வாகனத்தில் கிரீஷ்மா

பின்னர் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்துக்குச் சென்று ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் டோலோ மாத்திரைகள் கலந்த ஜூஸை ஷாரோனுக்கு குடிக்க கொடுத்திருக்கிறார் கிரீஷ்மா. அதை குடித்த ஷாரோன் ஜூஸ் கசப்பாக இருந்ததாகக் கூறியிருக்கிறார். ஜூஸ் சேலஞ்ச் என கிரீஷ்மா கூறும் வீடியோ ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பத்து முறை ஜூஸில் மாத்திரைகள் கலந்து கொடுத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஜூன் 13-ம் தேதியும், ஜூலை 18-ம் தேதியும் திற்பரப்பில் ஒரு லாட்ஜில் 2-ம் நம்பர் அறையில் ஷாரோனும், கிரீஷ்மாவும் காலை முதல் மாலை வரை தங்கியிருந்திருக்கின்றனர். அந்த லாட்ஜிக்கும் கேரளா போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

திற்பரப்பில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கிரீஷ்மா

இது பற்றி திருவனந்தபுரம் க்ரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி ஜான்சன் கூறும்போது, “தமிழக போலீஸுக்கு வழக்கை மாற்றுவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. கிரீஷ்மா விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார்” என்றார். குமரியில் நடந்த விசாரணையின்போது கிரீஷ்மா அனைத்து விஷயங்களையும் சிரித்தபடி விளக்கிக் கூறினார். ஏற்கெனவே இவர்கள் திருமணம் செய்துகொண்ட வெட்டுக்காடு சர்ச்சுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, “இங்கு திருமணம் முடிந்த பிறகு நாங்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தித்தோம். ஆனால், அவனை என் கையால் கொலைசெய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது” என கிரீஷ்மா சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். நாளை கிரீஷ்மாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதால் அவர் குரல் சோதனைக்காக திருவனந்தபுரம் ஆகாசவாணி ரேடியோ ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.