சென்னையில் கன்டெய்னர்களில் பதுக்கப்பட்ட போதைப்பொருள்கள்; ஸ்கெட்ச் போட்டு வளைத்த புதுச்சேரி போலீஸ்!

புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களின் விற்பனை அதிகரித்திருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து சீனியர் எஸ்.பி தீபிகாவால் அமைக்கப்பட்ட தனி சிறப்புப் படையினர் போதைப்பொருள் விற்பனை கும்பலை தேடும் பணியில் இறங்கினர். அதன்படி சில நாள்களுக்கு முன்பு ரகசியமாக வந்த தகவலின் அடிப்படையில், சாரம் தென்றல் நகரில் உள்ள ஒரு வீட்டில் கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அதையடுத்து அங்கிருந்த மொத்த வியாபாரி மணிகண்டன் என்பவரைக் கைதுசெய்த போலீஸார், ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை போதைப்பொருள்கள் மற்றும் அவற்றை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.24.56 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில், சென்னை மதுராந்தகத்தைச் சேர்ந்த ஷாஜகான், சத்தியமூர்த்தி ஆகியோரிடமிருந்து போதைப்பொருள்களை வாங்கியதாகத் தெரிவித்தார். அதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் கைதுசெய்த போலீஸார், ரூ.7.31 லட்சம் பணம், போதைப்பொருள்களை ஏற்றி அனுப்பும் மினி கன்டெய்னர் லாரி, சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கன்டெய்னர்களில் மூட்டை மூட்டையாக போதைப்பொருள்கள்

கைதுசெய்யப்பட்ட இருவரும் சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரவி  என்பவரிடம் போதைப்பொருள்களை வாங்கியதாக கைகாட்டினார்கள். அதையடுத்து ரவியை  குறிவைத்த சிறப்புப்படை போலீஸார், இன்று அவரைக் கைதுசெய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் இரண்டு கன்டெய்னர்கள் மற்றும் 2 லோடு கேரியர் வாகங்களை போலீஸார் சோதனையிட்டனர். அவற்றில் மூட்டை மூட்டையாக புகையிலை, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை போதைப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 6 டன் எடையுள்ள போதைப்பொருள்களையும், அந்த வாகனங்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ரவியுடன் சேர்த்து மரக்காணம் குமார், சென்னை நடராஜன், தூத்துக்குடியைச் சேர்ந்த கோபால், மணிகண்டன், ஆனந்த் ஆகியோரையும் கைதுசெய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். அதேபோல கைப்பற்றிய போதைப்பொருள்கள் அடங்கிய வாகனங்களும் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன. டி.நகர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களிலிருந்த போதைப்பொருள்களை புதுச்சேரி சீனியர் எஸ்.பி தீபிகா பார்வையிட்டு போலீஸாரை பாராட்டினார். பின்னர் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.