புதுச்சேரி: புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் சுமார் 8 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். புதுச்சேரி கோரிமேடு எல்லைக்கு உட்பட பகுதியில் கடை மற்றும் குடவுனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது கடையில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 1 லட்சம் மதிப்பிலான 100கி தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் 24 லட்சம் 50ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஜாஜஹான், சத்யமூர்த்தி ஆகியவரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 7 லட்சம் பணம் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். பின்பு விசாரணையில் சென்னை குன்றத்தூர்- திருமுடி நகர் பகுதியை சேர்ந்த மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்கி வந்து புதுச்சேரி பகுதி முழுவதும் போதைப்பொருள் விற்பதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இதனால், அவர்களை விரைந்து கைது செய்யுமாறு போலீஸ் தலைமையகம் சிறப்பு அதிரடி போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறப்பு அதிரடி போலீசார் 2 நாட்களாக குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது, குன்றத்தூர் பகுதியில் சதேகத்திற்கு உட்பட்ட 2 கண்டெய்னரில் மற்றும் 2 வேன்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அரசால் தடைச்செய்யப்பட்ட போதைப்பொருள்கள் 7 டன் இருப்பதும், இதனை புதுச்சேரி பகுதிக்கு கடத்த இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக, மொத்த வியாபாரி ரவி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு 50 லட்சம் என்று புதுச்சேரி போலீசார் தெரிவித்தனர்.