திருப்பதி: சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று ஆந்திரா, தெலங்கானாவில் அனைத்து முக்கிய கோயில்களின் நடை சாத்தப்பட்டது. குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 12 மணி நேரம் அடைக்கப்பட்டது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று காலை 8 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து கோயில்களும், காணிப்பாக்கம் விநாயகர் கோயில், விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில், அன்னவரம் சத்தியநாராயணர் கோயில், ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோயில், சிம்மாச்சலம் அப்பண்ணா கோயில் என அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. ஆனால், ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மட்டும் கிரகண கால அபிஷேகம் நடந்தது.
இக்கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். இதில் சில கோயில்கள் மட்டும் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோன்று, தெலங்கானா மாநிலத்தில் உள்ள வேமுலவாடா ராஜராஜேஸ்வர சுவாமி கோயில், யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பத்ராத்ரி கோதண்டராமர் கோயில் ஆகிய கோயில்கள் காலை முதலே முடப்பட்டு, இரவு 8 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.