கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு பணிகளுக்காக ஊராட்சி பகுதிகளுக்குச் சென்று வருவது வழக்கம். அந்த வகையில் கடுக்கரை ஊராட்சி பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்ய கலெக்டர் அரவிந்த் சென்றார். அங்கிருந்து திரும்பி வரும்போது கலெக்டரின் கார் கடுக்கரையில் சாலையோர ஓடையில் சரிந்து விபத்துக்குள்ளானது. முன்பக்க டயர் முழுவதும் ஓடையில் பதிந்த நிலையில் மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் அரவிந்துக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து கலெக்டர் வாகனத்தில் இருந்து வெளியே இறங்கினார். பின்னர் டெம்போவில் கயிறு கட்டி கலெக்டரின் கார் மீட்கப்பட்டுள்ளது.
நடுரோட்டில் குளம்போல தண்ணீர் தேங்கி கிடக்கும் நிலையில் ஓரமாகச் செல்ல முயன்ற குமரி கலெக்டரின் கார் ரோட்டோர பள்ளத்தில் புதைந்த புகைப்படத்தை யாரோ சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘கலெக்டருக்கு இந்த கதி என்றால் சாதாரண மக்களுக்கு என்னநிலை’ எனவும், ‘குமரி மாவட்ட சாலைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. இதுவும் விடியல் ஆட்சிதான்’ என சிலரும்… `துணிந்து அந்த ரோட்டில் வாகனத்தை ஓட்ட செய்த ஆட்சியரை பாராட்டவேண்டும்’ எனவும் கமென்ட்டு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இது குறித்து கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம், “கடுக்கரை பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் ஆய்வுப் பணிக்காக கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கார்களில் சென்றனர். மலைப்பகுதியில் எப்போதும் மழை பொழிவதால் சாலைகள் விரைவில் சேதமாகிவிடும். அந்த சாலையின் ஓரத்தில் கலெக்டரின் கார் புதைந்துவிட்டது. உடனே கலெக்டர் அதிகாரிகள் வந்த மற்றொரு காரில் ஆய்வுப் பணிக்காக சென்றுவிட்டார். உடனே கார் மீட்கப்பட்டு ஆய்வு நடக்கும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கலெக்டரின் கார் சாலை ஓரத்தில் சிக்கியதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் போட்டோ எடுத்தனர். அந்த போட்டோதான் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது” என்றனர்.