புதுடில்லி அருகே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளையும், போதிய சாட்சியங்களை அரசு தரப்பு தாக்கல் செய்யாததால் விடுதலை செய்ததாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடில்லி அருகே ஹரியானா மாநிலம் சாவ்லா என்ற இடத்தில் 2012ம் ஆண்டில், 19 வயது இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மட்டுமின்றி, கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டு இருப்பதும் மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார் ராகுல், ரவிகுமார், சோட்டு என்ற வினோத் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தது.
இந்த வழக்கில் மூவருக்கும் துாக்கு தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் 2014ல் தீர்பளித்தது. அந்த தீர்ப்பை புதுடில்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மூவரும் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் விடுதலை செய்வதாக அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில், தீர்ப்பின் விபரங்கள் நேற்று வெளியாகின. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த வழக்கில் மொத்தம் உள்ள 49 சாட்சிகளில் 10 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அதேபோல், குற்றவாளிகளை கண்டறியும் அடையாள அணிவகுப்பும் நடத்தப்படவில்லை. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய கீழமை நீதிமன்றம் விசாரணை முறைகளில் சட்டத்தை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது, குற்றத்தை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்யவில்லை.
எனவே இதில் ஏற்படும் சந்தேகத்தின் பலனை மூவரும் அனுபவிக்கும் விதமாக மூவரையும் விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement