பண மோசடி வழக்கில், வரும் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்கங்களை ஒதுக்கி பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது தொடர்பான வழக்கில் நவம்பர் 3 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி, முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனை நிராகரித்த முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “என் மீது குற்றம் இருந்தால், சம்மன் அனுப்புவதை விட்டு விட்டு கைது செய்யுங்கள்” என, அமலாக்கத் துறைக்கு அவர் சவால் விடுத்தார்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், வரும் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது.