குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 160 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியிலும், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மஜூரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
படேல் சமூகத்தை சேர்ந்த தலைவர் ஹர்திக் படேல் வீரம்காம் தொகுதியிலும், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். ருஷிகேஷ் படேல், ஜிது வகானி, ஹர்ஷ் சங்வி, ஜகதீஷ் விஸ்வகர்மா, கனு தேசாய், கிரித்சிங் ராணா மற்றும் பூர்ணேஷ் மோடி போன்ற பல கேபினட் அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் மீண்டும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் .
அன்றைய தினம் அறிவிக்கப்பட்ட 160 பேர் கொண்ட பட்டியலில் 14 பெண்கள், 13 SC மற்றும் ST வேட்பாளர்கள் உள்ளனர். பட்டியலில் தற்போது பதவியில் உள்ள 69 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், 38 புதிய முகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். 69 பேரில் 17 பேர் கடந்த பத்தாண்டுகளில் பாஜகவில் இணைந்தவர்கள். அவர்களில் பகபாய் பரத் காங்கிரஸில் இருந்து விலகி புதன்கிழமை பாஜகவில் இணைந்தார். இதேபோல், செவ்வாயன்று தனது இரண்டு மகன்களுடன் பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ்காரர் மோகன்சிங் ரத்வா, சோட்டாடேபூர் தொகுதியில் அவரது மகன் ராஜேந்திர சிங் நிறுத்தப்பட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக கூறிய முதல்வர் படேல் “பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், நாங்கள் அயராது உழைக்கிறோம். நாங்கள் தனிப்பெரும் கட்சியாக வெற்ற பெறப் போகிறோம், இது வரை இல்லாத அளவு வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தலைவர் அல்பேஷ் தாகூரின் பெயர், 160 பேர் கொண்ட முதல் பட்டியலில், அறிவிக்கப்படவில்லை. அகமதாபாத் நகரைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களுக்கும், ராஜ்கோட் நகரைச் சேர்ந்த 4 பேருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மோர்பி எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜாவுக்கும் டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ காந்திலால் அம்ருதியா போட்டியிடுகிறார். மோர்பி பாலம் இடிந்தபோது ஆற்றில் குதித்து மக்களை காப்பாற்றினார் அம்ருதியா என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், குடியானா, பாவ்நகர் கிழக்கு, தோராஜி, உப்லேடா மற்றும் சோரியாசி ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்னும் கட்சி அறிவிக்கவில்லை.
புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல், முன்னாள் மூத்த அமைச்சர்கள் பூபேந்திரசிங் சுடாசமா, பிரதீப்சிங் ஜடேஜா, மூத்த தலைவர்கள் ஆர்.சி.பல்டு, சவுரப் படேல், கவுசிக் படேல் ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நவம்பர் 14ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதியும் கடைசி நாளாகும்.