பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை… நெருங்கும் ஆராய்ச்சியாளர்கள்..!

கிளியோபாட்ரா இந்த பெயரை கேட்டதும் பலருக்கும் பேரழகி; எகிப்து அரசி, சக்திவாய்ந்த பெண், கண்களால் அனைவரையும் கவரும் திறன் படைத்தவர், அழகால் ஒரு சாம்ரஜ்ஜியத்தையே அழித்த பேரரசி இப்படி பல விஷயங்கள் கண் முன் வந்து போகும். எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி என தன்னை கூறிக் கொண்ட கிளியோபாட்ரா, 18 வயதிலேயே அரசியாகி சிறப்பாக ஆட்சி செய்தவர். சிறுவயதிலேயே அவருக்கு அரசாட்சி, தலைமைத்துவம் பற்றி கற்றுக் கொடுத்திருந்தார் அவரது தந்தையும் அரசருமான 12ஆம் தாலமி.

எகிப்திய விதிகளின்படி, ஒரு பெண் தனியாக ஆட்சி செய்ய முடியாது. அதனால் கிளியோபாட்ரா 10 வயது சிறயவரான தனது சகோதரனை மணந்து கொண்டார். இது விசித்திரமாக இருந்தாலும், அப்போதைய எகிப்திய வழக்கம் அப்படியே இருந்ததாக தெரிகிறது. கிளியோபாட்ராவின் அரசாட்சியில் எகிப்து செழிப்பாக இருந்ததாக சொல்கிறார்கள். எகிப்திய மக்கள் கிளியோபாட்ராவை கடவுளாகவும், தேவதையாகவும் பார்த்தார்கள். இதனால், நாட்டை விட்டு அவரது கணவர்/சகோதரனால் வெளியேற்றப்பட்ட கிளியோபாட்ரா, ரோம் நாட்டின் ஜெனரலாக இருந்த 50 வயதுக்கும் மேலான ஜூலியஸ் சீசரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 20 என கூறப்படுகிறது. ஜூலியஸ் சீசர் மற்றும் எகிப்து மக்கள் உதவியுடன் மீண்டும் எகிப்தின் ஆட்சியை பிடித்தார். அதன்பின்னர் மீண்டும் ரோம் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ரோமானியர்களால் ஜூலியஸ் சீசரின் படுகொலை செய்யப்பட்ட பின்னர், ரோம பேரரசின் தளபதி மார்க் ஆன்டனியை கிளியோபாட்ரா மணந்து கொண்டார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்ததாகவும் வரலாறு கூறுகிறது. ரோமை ஜூலியஸ் சீசரும், எகிப்தை கிளியோபாட்ராவும் ஆட்சி செய்து வந்தனர். அந்த சமயத்தில் ரோமை கைப்பற்ற நடைபெற்ற போர் ஒன்றில் தனது மகன்களிடம் தோல்வியை தழுவியதால், மார்க் ஆன்டனி தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரைத்தொடர்ந்து கிளியோபாட்ராவும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. போரின் முடிவில், எகிப்தையும் ரோம் கைப்பற்றியது.

யார் இந்த அரிய வகை ஏழைகள்? உச்ச நீதிமன்ற தீர்ப்பால் யாருக்கு லாபம்?

அத்துடன், கிளியோபாட்ரா அவரது காதலன் மார்க் ஆன்டனிக்கு அருகே அவர்கள் இருவரது விருப்பப்படி புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. ஆனாலும், எகிப்தை ஆண்ட மேசிடோனிய பேரரசின் கடைசி அரசியான கிளியோபாட்ராவின் வரலாறு மர்மமாகவே உள்ளது.

அதேபோல், கிளியோபாட்ரா கல்லறை இருக்கும் இடமும் தெரியாமல் ரகசியகாமவே இருந்த நிலையில், எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய காலத்து கோயிலின் கீழுள்ள சுரங்கப்பாதை புகழ்பெற்ற பேரழகி ராணி கிளியோபாட்ராவின் கல்லறைக்கு செல்லும் வழியாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எகிப்து நாகரிகம் என்பது மிகவும் பண்டைய கால நாகரிகம். அப்போதே செழிப்பாக இருந்த நாகரிகமாகவும் எகிப்திய நாகரிகம் கருதப்படுகிறது. அங்குள்ள பிரமிடுகளில் பல்வேறு மர்ம ரகசியங்கள் புதைந்துள்ளதாக தெரிகிறது. இந்த பிரமிடுகளில் அரசர்கள், அரசிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களது உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. நவீன உலகத்திற்கும் பண்டைய எகிப்து நாகரிகத்திற்கும் இடையே தொடர்பு குறித்து தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

சுரங்கப்பாதை

அந்த வகையில், பண்டைய எகிப்தின் தலைநகர் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு அருகே உள்ள தபோசிரிஸ் மேக்னா எனும் கோயிலுக்கு கீழே சுரங்கப்பாதை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுரங்கப்பாதை புகழ்பெற்ற பேரழகி ராணி கிளியோபாட்ராவின் கல்லறைக்கு செல்லும் வழியாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சுரங்கப்பாதை ஒரு மைலுக்கும் அதிகமான நீளத்தை கொண்டுள்ளதாக இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன. எந்த கருவிகளும் இல்லாமல் அந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதையை ‘வடிவியல் அதிசயம்’ என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சுரங்கப்பாதையின் ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, அதன் வடிவமைப்பு கிரேக்கத்தின் ஜூபிலினோஸ் சுரங்கப்பாதையைப் போலவே இருப்பதாக எகிப்து சுற்றுலா மற்றும் பழங்கால அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘கிளியோபாட்ராவின் புதைக்கப்பட்ட வரலாற்றுக் கதைகள் உண்மையாக இருந்தால், இது 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இருக்கும்.’ என்கிறார் சான் டொமிங்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேத்லீன் மார்டினெஸின். எகிப்தின் கடைசி ராணி அங்கே அடக்கம் செய்யப்படுவதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தாலும், அதனைத் தேடுவது தனது கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்பாண்ட பாத்திரங்கள் சேற்றின் கீழ் காணப்பட்டன. இது நீருக்கடியில் புதைந்துள்ள தபோசிரிஸ் கோவிலுடனான அதன் தொடர்பை மேலும் பலப்படுத்துகிறது. தபோசிரிஸின் முந்தைய அகழ்வாராய்ச்சிகளில் கிளியோபாட்ரா மற்றும் அலெக்சாண்டர் ஆகியோரின் உருவங்கள் மற்றும் பெயர்கள் கொண்ட நாணயங்கள் மற்றும் ஐசிஸ் தெய்வத்தின் சிலைகள் கிடைத்துள்ளன.” என்று எகிப்து சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் பண்டைய கால எகிப்திய நாகரிகம் பற்றி படிக்கும் எகிப்தியாலஜியின் மூத்த விரிவுரையாளரான ரோலண்ட் என்மார்ச் கூறுகையில், “தபோசிரிஸ் மேக்னா கோயிலில் தேவதை இசிஸின் கணவரும், எகிப்திய கடவுளுமான ஒசிரிஸின் முக்கிய சன்னதி உள்ளது. இந்த கோயிலை பற்றிய கண்டுபிடிப்புகளில் இருந்து, அக்கோயிலுக்கு செல்வந்தர்கள் ஆதரவளித்திருக்கலாம் என்பதும், அவர்கள் அதனை சுற்றி புதைக்கப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.” என்கிறார். தேவதை இசிஸின் மறுபிறவி என தன்னை கிளியோபாட்ரா கூறிக் கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.