இன்று திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது,
“மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம். அவர்களை கடந்த டிசம்பர் மாதமே அழைத்து செல்ல வேண்டியது, ஆனால் அப்போது ஒமைக்ரான் பரவல் இருந்ததனால், அவர்களை அழைத்து செல்ல முடியவில்லை.
அதனால், தற்போது அவர்களை அழைத்து சென்று, சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி, துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றி காட்டி நான்கு நாட்களுக்கு அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் நான் இருப்பேன். மாணவர்களை சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து தான் அழைத்து செல்கிறோம்.
இதேபோல், இனி வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் “வாசிக்கலாம் வாங்க” உள்ளிட்ட திட்டங்களின் மூலம் தமிழ்நாடு அரசு சார்பிலேயே அவர்களையே வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு புதிய கல்வி கொள்கையை பின்பற்றுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரும் தெரிவித்து வருகிறார். ஆனால் இந்தக் கொள்கையை முதலமைச்சர் ஆரம்பத்திலேயே எதிர்த்து அதற்காக குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.
இந்தக் குழு அதற்கான வரைவு அறிக்கையை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்த பின்பு நாங்கள் எந்த கல்விக்கொள்கையை பின்பற்றுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும். அதன் பின்னர் அவர்கள் பேச வேண்டும்.
தொடர்ந்து, பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்போருக்கான இடஒதுக்கீடு காரணமாக பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
இருப்பினும், இதை தடுப்பதற்காக தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். மேலும், இ.வி.எஸ். இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதல்வராகவும் தமிழக முதலமைச்சர் இருப்பார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.