திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.
இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வந்தனர். இதனால் இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தினமும் 25 ஆயிரம் பேரும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் அலிப்பிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 66,946 பேர் தரிசனம் செய்தனர். 26,990 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.