பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்காக, அவரது மகள் ரோஹினி ஆச்சார்யா சிறுநீரக தானம் செய்ய முன்வந்துள்ளார்.
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 74, கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். கால்நடை தீவன ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தற்போது ஜாமினில் வெளியில் உள்ளார்.
சிறுநீரகப் பிரச்னை காரணமாக கடந்த மாதம் சிங்கப்பூர் நாட்டிற்கு லாலு பிரசாத் யாதவ் சென்றார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டில் வசிக்கும் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹினி ஆச்சார்யா, தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் அளிக்க முன்வந்துள்ளார்.
இது குறித்து ரோஹினி ஆச்சார்யா கூறியதாவது:
ஆம். தந்தைக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய உள்ளது உண்மை தான். என் சிறுநீரகத்தை தந்தைக்கு கொடுப்பதில் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.