பாஜக தலைவர் அண்ணாமலை நவம்பர் 8 -ம் தேதி மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் இன்று ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற திட்டத்தை வடிவமைத்துள்ளனர். பூத் கமிட்டி என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் பணியாற்றாமல், 365 நாட்களும் மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட பூத் கமிட்டியை இன்று தொடங்கியிருக்கிறோம். இது ஒரு சிறந்த முன்னெடுப்பு” என்றார்.
இது தொடர்பாக பா.ஜ.க மாநில பொது செயலாளர் A.P.முருகானந்தம், “இது அமைப்பு ரீதியில் வழக்கமான வேலைதான். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 65,000 பூத்களில் முழுமையாக இருப்பது இரு கட்சிகள்தான். அதில் இப்போது பா.ஜ.க-வும் நெருங்கி வருகிறது. அமைப்பு ரீதியாக கட்சியை வலிமையாக்கி வருகிறோம். சமீபத்தில் பிரதமர் கூட தமிழ் நாடுதான் அடுத்த டார்கெட் என்று சொல்லி இருக்கிறார். 80% ரோட் மேப் இல்லாமல் அந்த வார்த்தை வராது என்பது எல்லோருக்கும் தெரியும். அமித் ஷாவின் வெற்றிக்கு காரணம் ‘மைக்ரோ மேனஜ்மென்ட்’தான். அதில் சக்ஸஸ் ஆனதுக்கு காரணம் பூத் கமிட்டி. அந்த வகையில் தமிழ் நாட்டை பொறுத்தவரை உண்மையாலுமே பூத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்கிறோம்” என்கிறவர், “ஒரு பக்கம் ஆளும் தி.மு.க அரசின் தோல்விகள், மறுபக்கம் மத்திய அரசின் திட்டங்கள் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதற்கான வேலைகளை பூத் அளவில் கொண்டு போய் செயலாற்ற போகிறோம்” என்கிறார்.
இதனையே ஆமோதித்து பேசிய பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, “எல்லா பூத்களிலும் ஆள் போட்டு வேலை செய்வது அஜெண்டா. அதற்காக ரொம்ப வருஷமா வேலை பார்த்து வருகிறோம். அதனை இன்னும் வலுவாக்குவதோடு, பொறுப்பில் இருப்பவர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் என அனைவரும் அவரவர் பூத்தில் கவனம் செலுத்தி தொண்டர்களை உருவாக்க வேண்டும் என்று தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி வருகிறார். அதில் பூத் தலைவர், பதிமூன்று பேர் கொண்ட குழு அமைத்து உறுப்பினர்கள் சேர்ப்பது முதற்கட்ட திட்டம். பா.ஜ.க-வை பொறுத்தவரை 25 உறுப்பினர்களுக்கு மேல் ஒரு பூத்தில் இருந்தால்அதை ‘பூரண பூத்’ என்போம்.
இன்று பா.ஜ.க-வில் இணைவதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களை கொண்டு வருவது எங்கள் வேலை. கிளை கமிட்டி தலைவரிலிருந்து மாநில தலைவர் வரை அவரவர் பூத்களை வலிமைப் படுத்த ஆயத்தமாகியுள்ளோம். பூத் வரை போகாத தலைவர்கள் போகும் போது அங்குள்ள மக்கள் பிரச்னைகள் தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வேலை செய்வதற்கான வாய்ப்பாகவும் இந்த முன்னெடுப்பு இருக்கும். இது அடிப்படையானதாக இருந்தாலும், இதுதான் வெற்றியைக் கொடுக்கும்” என்கிறார்.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரியன், “தேர்தலுக்கு தேர்தல் பகுதி ஆட்களை வைத்து கட்சிகள் பூத் கமிட்டி அமைக்கும். தேர்தலின் போது வாக்காளர்களை ஒருங்கிணைப்பது, வீட்டுக்கு வீடு நோட்டீஸ் கொடுப்பது, பணம் விநியோகிப்பது போன்ற விஷயங்களை இந்த பூத் கமிட்டியினர் தேர்தலுக்கு தேர்தல் செய்வார்கள். ஆனால், தேர்தல் நேரம் மட்டுமில்லை தேர்தல் இல்லாத காலங்களிலும் பூத் கமிட்டி வேலை செய்யும், மக்கள் பிரச்னைகளை சந்திக்கும் என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார். இது நல்ல விஷயம் தான். பா.ஜ.க-வினருக்கு பிளஸ்பாயிண்ட் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ்-இன் நிரந்திர ஊழியர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள். கட்சியில் இருப்பவர்கள் பல்வேறு வேலைகளில் இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் கிராமங்களுக்கெல்லாம் பரவி பூத் கமிட்டிக்கான வேலைகள் செய்வார்கள்.
திமுக-வில் பகுதி, வட்ட, ஒன்றிய செயலாளர்கள் செய்வது போல் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பார்கள். இது அவர்களுக்கு பெரிய பலம். பாஜக-வின் இந்த முன்னெடுப்புக்கு ஆர்.எஸ்.எஸ் ஒரு பக்கம் உதவினாலும், தொடர்ந்து வேலை செய்வதற்கு எல்லா இடங்களிலும் பாஜக-வினர் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.
இதையெல்லாம் தாண்டி இரட்டை இலை, உதய சூரியன் என்று இருக்க கூடிய வாக்காளர்களின் மனநிலையை மாற்ற வேண்டுமென்றால், வெறும் பூத் கமிட்டி அமைத்தால் மட்டும் போதாது, கடுமையான பிரசாரத்தை பா.ஜ.க மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 65,000 பூத் இருக்கிறது. ஒரு பூத்துக்கு ஐந்து பேர் வேலை செய்தாலும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேர் தேவைப்படுகிறார்கள். திமுக அதன் கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு எல்லாம் மீறி பா.ஜ.க தங்களின் அடித்தளத்தை உருவாக்க கடின உழைப்பை போட வேண்டியிருக்கிறது. இன்று பல கிராமங்களில் பா.ஜ.க-வின் கொடி பறக்கிறது என்று சொல்லி வருகிறார்கள். கொடி பறப்பதினால் கணிசமான பாஜக ஆதரவாளர்கள் இருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. அது உண்மையான வளர்ச்சியை காண்பிக்கிறதா என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும்” என்றார்.