தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தந்தையுடன் சேர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர் வழக்கறிஞர் நந்தினி. சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோதே பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார்.
மதுக்கடைகள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராகவும் நந்தினி ஆனந்தன் குரல் கொடுத்து வருவதை செய்து வருகிறார்.
குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நாளை 11ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் வர இருக்கும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த போவதாக நந்தினி ஆனந்தன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இதனை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக சமூக ஆர்வலர் நந்தினி ஆனந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நந்தினி ஆனந்தன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது ‘மோடிக்கு எதிராக 11ம் தேதி கருப்புக்கொடி போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தோம்.
ஆனால் 9ம் தேதியே திமுக அரசு எங்களை வீட்டு சிறையில் அடைத்துவிட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய திமுக ஆளுங்கட்சியான பின் மோடிக்கு எதிராக போராடினால் அடக்குமுறையை ஏவுவது ஏன்?’ என நந்தினி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி நாளை திண்டுக்கல் வர இருக்கும் நிலையில் நந்தினி ஆனந்தன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.