2ம் பாகம் வசூலை குவித்தால்தான் அடுத்த பாகம் வெளிவரும்: அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்
2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. வசூலில் புதிய சாதனை படைத்தது இந்த படம். 13 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளிவருகிறது. 2ம் பாகம் தயாரிக்க மட்டுமே 3 ஆண்டுகள் ஆனது. 2 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. 2ம் பாகத்தை தொடர்ந்து இரண்டு வருட இடைவெளியில் 3 மற்றும் 4ம் பாகம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2ம் பாகம் வசூலை குவித்தால் மட்டுமே அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும் என்று இயக்குனரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஜேம்ஸ் கேமரூன் கூறியிருப்பதாவது: நான் இந்தப் படத்தை எழுதியபோது சினிமாவில் இருந்த நிலை வேறு. இப்போது உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெருந்தொற்று சினிமாவை பெரிதாக பாதித்தது. ஓடிடி தளங்கள் புதிதாக வந்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு முழுமையாக வரத் தொடங்கிவிட்டார்களா என்பது சந்தேகமே.
ஒருவேளை அவதார் மக்களை தியேட்டருக்கு அழைத்து வரலாம். ஆனால் எத்தனை பேரை அழைத்து வரும் என்ற நிலை உள்ளது. சந்தை நிலவரமும் அப்படித்தான் உள்ளது. அதனால், அவதார் பட வரிசைகள் மூன்று பாகங்களோடு முடித்துக் கொள்ளும் எண்ணம் உள்ளது. அதுவும் 2ம் பாகத்தின் வசூல் நிலவரத்தை பொறுத்தே இருக்கும்.
3ம் பாகத்தை இயக்கும் பொறுப்பை கூட நம்பிக்கைக்குரிய இயக்குநர் ஒருவரிடத்தில் ஒப்படைக்கும் எண்ணமும் உள்ளது. நான் சுவாரஸ்யம் நிறைந்த கதை கரு ஒன்றை உருவாக்கி வருகிறேன். அதை இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்றாலும் நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
இவ்வாறு ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.