கர்நாடகாவில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் ரவுண்டானா அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் வந்த கர்நாடக மாநிலம் பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அந்த கார் நிற்காமல் பேரி கார்டை இடித்துத் தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தது. சந்தேகமடைந்த போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் ரோந்து வாகனங்களில் காரை பின்தொடர்ந்தது விரட்டிச ;சென்று பிடிக்க முயன்றனர்.
போலீசார் பின் தொடர்வதை பார்த்த காரில் சென்ற மர்ம நபர்கள் மண்ணச்சநல்லூர் அருகே எதுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை மீட்டு சோதனை நடத்தினர்.
அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து குட்கா மூட்டைகளை கைப்பற்றிய போலீசார், குட்கா பொருட்களை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM