சமூக நீதி பேசுவர்களின் ஆட்சியில்தான் இந்த கொடுமை… கொந்தளிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்!

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி தினந்தோறும் ஆளுகிற அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நினைவுப்படுத்தி வந்தாலும்கூட, தேர்தல் வாக்குறுதிகள் இன்றைக்கு கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருந்து வருகின்றன.

குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஐந்தரை லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள மூணரை லட்சம் அரசு வேலை வாய்ப்புகளுக்கு இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்கிற திமுகவி் தேர்தல் வாக்குறுதி எண் 187 இல் கூறப்பட்டிருந்தது. .மேலும் புதிதாக ஏறத்தாழ 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தனர். இந்த வாக்குறுதிகளும் இன்றைக்கு கிணற்றிலே போட்ட கல்லாகவே உள்ளன.

தமிழகத்திலேயே சமூக நீதிக்கு ஒரு பேராபத்து வரக்கூடிய விதத்தில் இன்றைக்கு 69% இட ஒதுக்கீடுக்கு பேராபத்து வரக்கூடிய அரசாணை எண் 115 யை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று முதல்முதலாக குரல் கொடுத்தவர் இபிஎஸ்தான். இந்த அரசாணையால் வேலைவாய்ப்பில் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையும், காவலர் தேர்வு வாரியம் போன்ற தேர்வாணையங்கள் மூலமாக அரசு பணிகளுக்க நாம் ஆட்களை தேர்வு செய்து வருகிறோம். ஆனால் இந்த ஆள்சேர்ப்பு பணிகளுக்கு தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த திமுக அரசு முடிவு செய்திருப்பதுதான் இந்த அரசாணை எண் 115யின் சாரம்சமாகும்.

அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையில் மாற்றங்களை கொண்டுவருவதையும் ஆய்வு செய்வதற்கான வல்லுநர் குழு குறித்த இந்த அரசாணை எண் 115 பசுந்தோல் போர்த்திய புலி.

ஆள் தேர்வு முறையில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை மறைமுகமாக இதில் திணித்து தனியாரை உள்ளே நுழைப்பதன் மூலமாக சமூக நீதி கேள்விக்குறியாகி இருக்கிறது. தனியார் நிறுவனங்கள்கள் மூலம் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு குத்தகை முறையிலேயே பணியாளர்களை நியமிப்பது, சில பணிகளுக்கு நேரடியாக நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் முதலிலே தற்கால பணியாளர்களாக நியமித்து, பின் நாளில் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பணி நிரந்தரம் வழங்குதல் போன்ற திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த அரசாணை 115யில் இருக்கிறது.

சீர்திருத்த குழு அரசிடம் ஆறு மாதத்தில் சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இளைய சமுதாயத்தின் எதிர்காலம் இருளிலே மூழ்கும். இளைய சமுதாயத்தின் அரசு பணி என்கிற கனவு காணாமல் போகும், சமூக நீதிக்கு எதிரான திமுக அரசின் இந்த திட்டம் ரத்து செய்யப்படும்வரை இதனை அதிமுக எதிர்க்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.