சிர்மார்: இமாச்சல பிரதேசத்தின் வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் ஆளும் பாஜக எதையும் செய்யவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. சீர்மாரில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி வத்ரா பேசியதாவது: “இமாச்சல பிரதேசத்தில் 30 லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 15 லட்சம் இளைஞர்கள் வேலை இன்றி சிரமப்பட்டு வருகிறார்கள்.
இமாச்சல பிரதேசத்தில் 63 ஆயிரம் அரசுப் பணிகள் காலியாக உள்ளன. எனினும், இந்த பணியிடங்களை பாஜக கடந்த 5 ஆண்டுகளாக நிரப்ப முன்வரவில்லை. ஏனெனில், அவர்களுக்கு நல்ல நோக்கம் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. ஆனால், இமாச்சல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பாஜக மறுத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இமாச்சல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.70 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இது மிகவும் வேதனைக்கு உரியது. இமாச்சல பிரதேசத்தில் பாஜகவின் சாதனை என்று எதுவுமில்லை. வளர்ச்சி குறித்து அவர்கள் பேசக் கூடாது. ஏனெனில், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதும் இமாச்சல பிரதேசத்தின் வளர்ச்சியை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை” என்று அவர் பேசினார்.