புதுடெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷ்கோடியிலிருந்து இலங்கை கிழக்கு கடற்கரைப் பகுதி வரை சுண்ணாம்பு கற்களால் ஆன பாலம் போன்ற அமைப்பை ராமர் பாலம் என இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சேது சமுத்திர திட்டத்தால், ராமர் பாலம் சிதைந்துபோகும், எனவே அந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராமர் பாலத்திற்கு எவ்வித சேதமும் இல்லாத வகையில் சேது சமுத்திரத் திட்டம் மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2015-ம் ஆண்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கை சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்தார். அந்த மனுவில், ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் பட்சத்தில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை கோரிய தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தொடர்ந்து பதில்மனு தாக்கல் செய்யாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, “கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. ராமர் பாலத்தை பாரம்பரிய புராதான சின்னமாக அறிவிக்க முடியுமாம், முடியாதா என்பதே இந்த வழக்கில் எழுப்பப்பட்ட கேள்வி. ஆனால், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.
அப்போது மத்திய அரசு தரப்பில், “இந்த வழக்கில் பதில் மனு தயாராகிவிட்டது. சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை தாக்கல் செய்ய கூடுதலாக கால அவகாசம் வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொணட் நீதிபதிகள், வழக்கை 6 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பதில் மனு மற்றும் விளக்க மனுக்களை தாக்கல் செய்ய எதிர்மனுதாரரான மத்திய அரசுக்கும், மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் உத்தரவிட்டனர்.