திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் நாளை மதியம் 2 மணிக்கு மதுரை வருகிறார். இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தைப் பிரதமர் மோடி வழங்குகிறார். மேலும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவிருக்கிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க தரப்பிலிருந்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவருக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இருவரும் கலந்து கொள்வதோடு, பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கிறது என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள். அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த பதினாறுக்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகளையும் மோடி சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின் மூலம் தென்மாவட்டங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க-வின் வியூகம் பேசப்பட இருப்பதாகவும் சொல்கிறார்கள் பா.ஜ.க தரப்பில்.
இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் 75-ம் ஆண்டு விழாவுக்கு வருகைதரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை இரவு 11:30-க்கு சென்னை வருகிறார். அன்று இரவு சென்னையில் உள்ள லீலா பேலஸிசில் தங்குபவர், பா.ஜ.க நிர்வாகிகளோடு சில முக்கிய ஆலோசனைகளை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்குமுன்னர் அமித் ஷா சென்னை வந்தபோது, லீலா பேலஸில்தான் அ.தி.மு.க குறித்தும், கூட்டணி குறித்தும் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன என்பது நினைவுக் கூறத்தக்கது.
அந்த வகையில் ‘மெகா கூட்டணி…’ குறித்து இ.பி.எஸ் பேசியிருக்கும் நிலையில், அது குறித்தான பேச்சுவார்த்தைகளும் இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏற்கெனவே டெல்லியில் இ.பி.எஸ், அமித் ஷாவைச் சந்தித்திருக்கும் வேளையில், நாளையும் சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு ஓ.பி.எஸ் தரப்பினரும் நேரம் கேட்டிருப்பது கவனிக்கத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க-வின் முகமாக இருக்கும் இந்த இரு தலைவர்களின் வருகையால் தமிழக அரசியல் சூழல் மழையிலும் வெக்கையாக மாறி இருக்கிறது.