நியூயார்க்: உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ நிறுவனத்தை வாங்கியதை அடுத்து, ‘டெஸ்லா’ நிறுவன முதலீட்டாளர்கள், தங்களுடைய பங்குகளை விற்க துவங்கி உள்ளனர்.
எலான் மஸ்கின் கவனம் முழுக்க டுவிட்டரை நோக்கி திரும்பவும், டெஸ்லா முதலீட்டாளர்களிடம் கவலை ஏற்பட்டுள்ளது. இதனால், எலான் மஸ்க் நிகர சொத்து மதிப்பும் சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க் கிழமை நிலவரப்படி, எலான் மஸ்க் சொத்து மதிப்பு, 16.30 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட 50.69 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் வசம் டெஸ்லாவின் 15 சதவீத பங்குகள் உள்ளன.
எலான் மஸ்க் சொத்துமதிப்பு ஒரு பக்கம் சரிவைக் கண்டுகொண்டிருக்க, மறுபக்கம், மின்சார வாகன தயாரிப்பில் பல நிறுவனங்கள் இறங்கி, டெஸ்லாவுக்கு கடும் போட்டியை தந்துகொண்டிருக்கின்றன. மேலும், அண்மைக் காலமாக எலானின் கவனம் முழுக்க டுவிட்டரை நோக்கி திரும்பி உள்ளது. இதனால், டெஸ்லா முதலீட்டாளர்கள் கவலையில் இருப்பதாக, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, கடந்த செவ்வாய் அன்று, டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் 1.95 கோடி பங்குகளை, எலான் விற்பனை செய்துள்ளார். இதன் மதிப்பு கிட்டத்தட்ட 32 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement