இலுப்பை பூ சாராயம் குடித்து போதையில் தூங்கிய யானைகள்: ஒடிசாவில்தான் இந்த சம்பவம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் இலுப்பை பூ சாராயம் குடித்த யானைகள் கூட்டம் போதையில் தூங்கின. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நம் நாட்டில் பழங்குடியின சமுதாயத்தினர், இலுப்பை மர பூக்களை நீரில் ஊற வைத்து சாராயம் தயாரிப்பது வழக்கம். அப்படித்தான் ஒடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பை பூ சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர். அவர்கள், தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள முந்திரிக்காட்டில் பெரிய பெரிய பானைகளில் தண்ணீர் நிரப்பி இலுப்பை பூக்களை போட்டு ஊறவைத்தனர். பின்னர் வீடுகளுக்கு சென்றனர். மறுநாள் காலையில் அதிலிருந்து ‘மக்குவா’ என்ற நாட்டு சாராயம் தயாரிப்பதற்காக அங்கு கிராம மக்கள் சென்றனர். அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பானைகள் அனைத்தும் உடைந்து கிடந்தது. அவைகளின் அருகிலேயே 24 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவற்றை எழுப்புவதற்கு கிராம மக்கள் முயற்சி செய்தனர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அதன் பிறகு வனத்துறையினருக்கு அவர்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து, பெரிய மேளங்களை அடித்து சப்தம் எழுப்பியபிறகுதான் அந்த ‘கும்பகர்ண’ யானைகள் உறக்கம் கலைந்து காட்டுக்குள் சென்றன. அவை போதையில்தான் உறங்கின என்று கூறமுடியாது, சாதாரணமாககூட தூங்கியிருக்கலாம் என்று வனத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், சாராய பானைகள் அனைத்தும் உடைந்து கிடந்த நிலையில், பக்கத்திலேயே யானைகள் படுத்திருந்ததால் அவைகள் நிச்சயமாக சாராயம்தான் குடித்திருக்க வேண்டும் என்று கிராமத்தினர் உறுதியாக சொல்கின்றனர். மொத்தத்தில் சாராயம் அனைத்தும் அம்போ என ஆகி விட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.