பூதப்பாண்டி: தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெரிசனங்கோப்பு ஊராட்சியில் கிடைமட்ட கழிவுநீர் உறிஞ்சுக்குழி அமைக்கும் பணி நடந்து வந்தது. பழையாறு ஆற்றங்கரையோரத்தில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து காங்கிரீட் சுவர் அமைக்கப்பட்டது. காங்கிரீட் போடும்போது பக்க பலத்துக்காக பலகைகள் வைக்கப்படுகிறது. சுமார் 10 நாட்கள் நன்றாக காய்ந்தபிறகு பலகையை எடுத்துவிடுவார்கள். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த கிடைமட்ட கழிவுநீர் உறிஞ்சுக்குழியில் பலகை வைத்து காங்கிரீட் போடப்பட்டது.
ஆனால் தற்போது திடீரென காங்கிரீட் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளபோது காங்கிரீட் சுவர் இடிந்து விழுந்தது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பொதுவாக இரும்பு கம்பிகளை பயன்படுத்தி காங்கிரீட் சுவர் கட்டப்படும். ஆனால் இந்த கிடைமட்ட உறிஞ்சுக்குழாய் அமைக்கும் பணியில் இரும்பு கம்பிகள் இல்லாமல் காங்கிரீட் சுவர் கட்டப்பட்டுள்ளதால் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.