10 குழந்தைகள் இறந்த வழக்கு; காஷ்மீர் நிர்வாக மனு தள்ளுபடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஜம்மு – காஷ்மீரில் கெட்டுப்போன இருமல் மருந்தை குடித்ததால் இறந்த, 10 குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கும் உத்தரவை எதிர்த்து, யூனியன் பிரதேச நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில், 2020 ஜனவரியில் கெட்டுப் போய், விஷத்தன்மை வாய்ந்ததாக மாறிய இருமல் மருந்தை குடித்த, 10 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன.

இது குறித்த வழக்கை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், ‘மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக இந்த இறப்புகள் நடந்துள்ளன.

‘எனவே, இறந்த 10 குழந்தைகளின் பெற்றோருக்கு தலா, 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டதாவது:

அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக இந்த இறப்புகள் நடந்துள்ளன. அவர்கள் விழிப்புணர்வுடன் இருந்திருக்க வேண்டும்; குடிமக்களின் ஆரோக்கியம், அதிகாரிகளின் கைகளில் உள்ளது.

ஆனால், அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய தவறி விட்டனர். பொதுமக்களின் உயிருடன் விளையாடுவதை அனுமதிக்க முடியாது.

எனவே, இந்த விஷயத்தில் மனித உரிமை ஆணையத்தின் உத்தரவில் தலையிட இந்த நீதிமன்றம் விரும்பவில்லை.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ஜம்மு – காஷ்மீர் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.