திருமலை: திருப்பதியில் 5 லட்சத்து 6,600 பக்தர்கள் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை 80 நிமிடத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பக்தர்களும் வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நேற்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது. டிக்கெட் வெளியிட்ட உடனே பக்தர்கள் முன்பதிவு செய்ய தொடங்கினர். இதனால், 80 நிமிடங்களில் 5 லட்சத்து 6,600 டிக்கெட்டுகளை பக்தர்கள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்தனர். டிக்கெட் முன்பதிவின் போது எந்த இடையூறும் ஏற்படாததால் வெளியிடப்பட்ட 1 மணிநேரம் 20 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்களும் தீர்ந்தது. குறிப்பாக முன்பதிவு செய்யும் நேரத்தில் ஜியோ மார்ட்டின் கிளவுட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதால் பக்தர்கள் முன்பதிவு செய்வதில் ஏற்படும் சிரமம் தவிர்க்கப்பட்டது. டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு ரூ.300 தரிசன டிக்கெட் விற்பனை மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.15.20 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.