பெங்களூரு: சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி நேற்று காலை தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் விதான சவுதாவுக்கு காரில் சென்று, அங்கு கனகதாசர், வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெங்களூரு ரயில் நிலையத்துக்கு சென்ற அவர், பாரத் கவுரவ் காசி தரிசன ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நாட்டின் 5-வதும், தென்னிந்தியாவின் முதலாவதுமான சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற மோடி ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைத்தார். தொங்கும் பூங்காவைப் போல கண்ணை கவரும் வகையில் 2,55,645 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட முனையத்தை பிரதமர் பார்வையிட்டார். இதையடுத்து முனையத்தின் நுழைவாயிலில் 108 உயரத்தில் ரூ.84 கோடி செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கெம்பேகவுடாவின் வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
உலகளவில் புதிய தொழில் வாய்ப்புகளுக்கான விளைநிலமாக இந்தியா பார்க்கப்படுகிறது. இந்த பெயர் கிடைப்பதற்கு பெங்களூருவே முதன்மை காரணம். புதிய தொழில் வாய்ப்புகளை ஈர்த்து, வளர்த்தெடுக்கும் வேலையை கர்நாடக அரசு சிறப்பாக செய்கிறது. இரட்டை இன்ஜின் அரசால் கர்நாடகா இயக்கப்படுவதால் வெளிப்புற கட்டமைப்பு, சமூக கட்டமைப்பு ஆகிய இரண்டிலும் வேகமாக முன்னேறி வருகிறது.
பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் புதிய இந்தியாவின் அடையாளம். விமானத்தைப் போல வேகமாக செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியின் அடையாளமாக விளங்குகிறது. அந்த ரயிலைப் போலவே இந்தியாவும் இப்போது வேகமாக முன்னேறி வருகிறது.
பெங்களூரு விமான நிலையத்தில் புதிய முனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால் ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகள் பயனடைவர். 2014-க்கு முன் இந்தியாவில் 70 விமான நிலையங்களே இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து 140 ஆக உயர்ந்துள்ளது. இவற்றின் மூலம் இளைஞர்களின் தொழில் திறனும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். கெம்பேகவுடாவின் தொலைநோக்குப் பார்வையோடு பெங்களூருவை கட்டமைத்தார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.