பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்களில் 4 தென் மாநிலங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் ரூ.25,000 கோடி மதிப்பிலான பல்வேறு மெகா திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் தெற்கு கர்நாடகம் ஆகிய நான்கு தென் மாநிலங்களில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். அப்போது, இந்தியாவை வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இன்று சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பிறகு தெலங்கானா மாநிலத்தின் ராம குண்டத்துக்கு செல்லும் அவர் அங்கு ரூ.9,500 கோடி மதிப்பிலான பன்னோக்கு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மோதல் சூழ்நிலை: தென் மாநிலங்களில் ஆளும் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பல மாநிலங்களில் ஆளும் அரசுக்கும் மத்திய அரசு நியமித்துள்ள ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும்சூழ்நிலையில் பிரதமரின் இந்தப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, ஆறு மாதங்களுக்குள் கர்நாடக சட்டப்பேரவை நடைபெறவுள்ள சூழலில் பிரதமர் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். மேலும், ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்துக்குப் போட்டியாகவும் பிரமதரின் இந்த வருகை பார்க்கப்படுகிறது.