காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிராவிற்குள் நுழைந்திருக்கிறது. இந்த யாத்திரை தேர்தலை கருத்தில் கொண்டு திட்டமிடப்படவில்லை. ஆனால் குஜராத், இமாச்சல பிரதேசத்திற்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை இல்லாமல் இருக்கிறது. அதோடு ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கி சூறாவளியாக பிரசாரம் செய்து வருகிறது. ஏற்கனவே டெல்லி, பஞ்சாப்பை காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆம் ஆத்மி பிடுங்கிக்கொண்டது. இப்போது குஜராத்திற்கு குறி வைத்திருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் களத்தில் தலைமை மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லாமல் இருக்கிறது. இதனால் குஜராத் காங்கிரஸ் கட்சியினர் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் குஜராத்தில் தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அர்விந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் பாஜகவை தோற்கடிக்க முடியாது என்றும், தங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறி முதல்வர் வேட்பாளரையும் அறிவித்து பிரசாரம் செய்து வருகிறார். குஜராத்தில் கடந்த முறை சட்டமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்ததால் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதோடு பிரதமர் பதவியில் மோடி இருந்த போதும் கூட பாஜகவால் 100 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. கடந்த முறை ராகுல் காந்தியின் கோயில் ஓட்டம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. அதே போன்று ஜோடோ யாத்திரை குஜராத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இம்முறை ராகுல் காந்தி குஜராத் பிரசாரத்திற்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திட்டமிட்டபடி ராகுல் காந்தி தனது ஜோடோ யாத்திரையை மகாராஷ்டிராவில் முடித்துக்கொண்டு மத்திய பிரதேசத்திற்குள் செல்லவேண்டும். அதன் படிதான் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலையொட்டி ராகுல் காந்தி தனது திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து தனது யாத்திரையை குஜராத் நோக்கி திருப்பவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி குஜராத் நோக்கி ஜோடோ யாத்திரையை திருப்பினால் அது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தி குஜராத் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தால் எதையாவது சர்ச்சைக்குறிய வகையில் பேசி அது பாஜகவுக்குத்தான் சாதகமாக அமையும் என்று பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி ஏற்கனவே குஜராத்திற்கு எதிராக பேசியிருப்பதையும் அந்த தலைவர் சுட்டிக்காட்டினார்.
அதோடு இமாச்சல பிரதேச தேர்தலுக்கும் ராகுல் காந்தி செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜோடோ யாத்திரையை சில நாட்கள் நிறுத்திவிட்டுத்தான் இமாச்சல பிரதேச தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளவேண்டும். இது தொடர்பாக இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் அளித்திருந்த பேட்டியில், “ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் வருவாரா என்று தெரியவில்லை. குஜராத் பாஜக-வுக்கு மிகவும் முக்கியமான மாநிலமாக இருக்கிறது. 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு குஜராத் தேர்தல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியும் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்து வருகிறார்.
தலைவர்களின் வாரிசுகள் ராகுல் யாத்திரையில் பங்கேற்பு:
மகாராஷ்டிராவுக்குள் நுழைந்துள்ள ராகுல் காந்தியின் யாத்திரையில் ஆரம்பத்தில் சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே கலந்து கொள்வதாக இருந்தது. உத்தவ் தாக்கரே ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டவர். சரத்பவாரும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் அவரால் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே கட்சி நிர்வாகிகளுடன் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். இதே போன்று உத்தவ் தாக்கரேயிக்கு பதில் அவரது மகன் ஆதித்ய தாக்கரே நேற்று மாலையில் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொண்டார். இருவரின் யாத்திரையில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். முதல் முறையாக இருவரும் இந்த யாத்திரையில் சந்தித்துக்கொண்டனர்.