டெல்லியிலிந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா மற்றும் பாஜக கட்சி அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ள உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டார். இந்த விமானம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தது.
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் நேரில் வந்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக அமித் ஷா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் ஆளுநர் மாளிகை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆளுநர் மாளிகையில் இரவு ஓய்வு எடுக்கும் அமித் ஷா சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் சென்னை, வாலாஜா சிலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, பிற்பகல் 2.25 மணி அளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியிலும் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார். பின்னர், அவர் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலமாக புது டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
இதையும் படிக்கலாமே: “இபிஎஸ் – மோடி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய வாய்ப்புள்ளது”- எம்.பி தம்பிதுரைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM