டெல்லி: இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய யுடிஎஸ் செல்லிடப்பேசி செயலி வாயிலாக முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளுவதில் இதுவரை இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. புறநகர்ப் பயணிகள், ரயில் டிக்கெட் எடுக்கும் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் இருக்க வேண்டும் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, 20 கிலோ மீட்டருக்குள் இருக்கலாம். புறநகர்ப் பகுதி அல்லாத ரயில் நிலையங்களில், இதுவரை 2 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு 5 கிலோ மீட்டர் தொலைவு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மண்டலங்களுக்கும் இந்த வசதி நவம்பர் 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும், தொடர்ந்து பயணிகள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. காகிதப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், பயணிகள் டிக்கெட் வாங்குமிடத்தில் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் நோக்கத்திலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனால் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் புறநகர் ரயில்களில் பயணிப்பதற்காக ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக் கொள்ள இந்தச் செயலி திட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படிப்படியாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, செகந்திராபாத் ஆகிய நகரங்களில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.
இது, புறநகர் அல்லாத அனைத்து ரயில் நிலையங்களுக்கும் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள உதவும் வகையில் இச்செயலி அனைத்து மண்டலங்களிலும் அமல்படுத்தப்பட்டது. இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில், நமது பெயர், பாலினம், பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண் உள்பட சில அடிப்படை தகவல்களை அளிக்க வேண்டும். செல்லிடப்பேசி எண்ணை உறுதி செய்துகொள்வதற்காக ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கடவுச் சொல் குறுந்தகவலில் வரும். அதை பதிவு செய்த பிறகு, லாக்-இன் செய்வதற்கான யூசர் ஐடி, கடவுச்சொல் ஆகியவை வழங்கப்படும்.
இதுவரை 5 கி.மீ. தொலைவில் ரயில் நிலையம் இருக்கும் பகுதிகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட் பெற முடியும். இது தற்போது 20 கி.மீ. தொலைவு என்று தளர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 டிக்கெட்டுகளை வாங்கலாம். நடைமேடைக்கு மட்டும் செல்வதற்கான டிக்கெட், மாதந்திர சலுகை பாஸ் ஆகியவையும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வாங்கலாம். இத்தனை ஆண்டுகளாக இந்தச் செயலி பயன்பாட்டில் இருந்தும், தற்போதுதான் செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.