சென்னை: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவ.7-ம் தேதி தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு’ என கூறியிருந்தார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றன. அதேநேரத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்துதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர்மாளிகையில் இன்று காலை நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஒவ்வொரு சட்டப்பேரவை கட்சி சார்பிலும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.