கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கடத்தல் தங்கங்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் ஸ்கூட் விமானத்தில் பயணிக்கும் நபர்கள் தங்கத்தை கடத்தி வருவதாக கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகளிடம் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பயணிகளின் பாக்கெட்டுகள், உடைமைகளில் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து கடத்தல் தங்கம் வைத்திருந்த அனைவரையும் கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து சுமார் 7.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ 4.11 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.