பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வெளியூர்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை தொடர்ந்து சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்த படியாக காய்கறி சாகுபடியே அதிகளவு உள்ளது.
அதிலும், காய்கறிகளில் தக்காளி விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதிலும், புரவிபாளையம், பொன்னாபுரம், முத்தூர், ஜமீன் காளியாபுரம், கோவிந்தனூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூர் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த ஜூன் முதல் துவங்கிய தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து, பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நன்கு விளைந்த தக்காளி அறுவடை பணி அதிகமாக இருந்தது. இதனால், அந்நேரத்தில் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட தக்காளி எண்ணிக்கை அதிகமாக இருந்ததுடன், குறைவான விலைக்கு விற்பனையானது. பல்வேறு கிராமங்களில் தக்காளி அறுவடை நிறைவடைந்ததும், கடந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் இருந்து புதிதாக தக்காளி சாகுபடியில் விவசாயிகள் இறங்கினர்.
இதனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி வரத்து குறைந்து ஒரு கிலோ ரூ.40வரை விற்பனையாகி உள்ளது. தற்போது, வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்து வந்தாலும், நல்ல விளைச்சலடைந்த தக்காளி அறுவடை பணி துவங்கப்பட்டுள்ளது. மேலும், கிணத்துக்கடவு, உடுமலை, கணியூர், தாராபுரம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மேலும் அதிகமாகியுள்ளது.
இதனால், தக்காளி விலை மீண்டும் குறைந்துள்ளது. நேற்று மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியிலிருந்து தக்காளி வரத்து வழக்கத்தைவிட அதிகமானதால் நூற்றுக்கணக்காண பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டன. தக்காளி வரத்து அதிகரிப்பால், அதன் விலை மிகவும் குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12க்கே ஏலம் போனது. இருப்பினும், தக்காளி வாங்க வியாபாரிகள் அதிகம் முன் வராததால், பெட்டியில் இருந்த தக்காளிகள் தேக்கமடைந்தது.