பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான(EWS) 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை, பாஜக, காங்கிரஸ், போன்ற காட்சிகள் வரவேற்றிருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இருப்பினும், தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மாநில தலைவர், கே.எஸ்.அழகிரி, “சமூகநீதி என்பது மனிதகுலத்துக்கே பொதுவானதொழிய, எந்தவொரு தரப்புக்கும் உரியது அல்ல. எனவே தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது” என ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, EWS பிரிவினருக்கான இடஒதுக்கீடு குறித்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் பா.ஜ.க, அ.தி.மு.க தவிர்த்து தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க உட்பட மொத்தம் 10 கட்சிகள் கலந்துகொண்டன. பின்னர் கூட்டத்தில், EWS இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் கூட்டத்தில் கலந்துகொண்ட செல்வபெருந்தகை, தேசிய அளவில் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருந்தாலும், தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சமூகநீதியை நிலைநாட்டத் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்குத் தமிழக காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்றும் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.