7 பேரின் விடுதலைக்காக தமிழக கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசுதான் நடவடிக்கை எடுத்தது என்று, ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தனர். இந்நிலையில், கடந்த மே மாதம் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து, தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட மற்ற 6 பேரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் நேற்று, எஞ்சிய 6 பேரையும் சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதில், ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பன் நாயக்கன்பட்டி ஆகும். இவர், தற்போது பரோலில் இருந்து வருகிறார். அவர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
7 பேரின் விடுதலை குறித்து ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது; “பல ஆண்டு சிறைவாசத்திற்கு பின்னர் ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 7 பேரின் விடுதலைக்காக தமிழக கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசுதான் நடவடிக்கை எடுத்தது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம். ரவிச்சந்திரன் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.