”எலே ஏம்லே இப்படி பண்றீங்க”-ட்விட்டரின் புதிய ப்ளூ டிக் ஐடியாவிற்கு வில்லனான நெட்டிசன்ஸ்

பணம் வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய ஐடியாவை கொண்டு வந்து, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய எலான் மஸ்க்கிற்கே ஆட்டம் காட்டி வருகின்றனர், வில்லங்கம் பிடித்த நெட்டிசன்கள் பலர்.
பணம் வாங்கிக்கொண்டு எல்லோருக்கும் ப்ளூ டிக் என்கிற சேவையை? அறிமுகப்படுத்தினார் ட்விட்டரின் புதிய ஓனரான எலான் மஸ்க். தமிழ்நாட்டில் தலதளபதி ரசிகர்கள் பணம் கட்டி ப்ளூ டிக் வாங்கி ஜாலியோ ஜிம்கானா என கெத்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் இந்த ப்ளூ டிக்கால் பெரிய நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன.
image
பணம் கட்டும் எல்லோருக்கும் ப்ளூ டிக்கை மஸ்க் வாரி வழங்க, பிரபல நிறுவனங்கள் மட்டுமின்றி பல பிரபலங்கள் பெயர்களிலும் கூட எளிதாக ப்ளூ டிக் வாங்கி மஸ்க்கை திக்குமுக்காடச் செய்துவருகிறார்கள் வில்லங்கம் பிடித்த சில நெட்டிசன்ஸ். டெக் ஜாம்பாவனான Apple, கேமர்களின் சொர்க்கபுரியான Nintendo, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள் டொனால்டு டிரம்ப், புஷ் என எல்லா பெயர்களிலும் verified ப்ளூ டிக்குடன் அக்கௌன்ட்கள் திறக்கப்பட்டன. அவற்றை ட்விட்டர் நிறுவனம் கண்டறிந்து தடை செய்வதற்குள் எல்லாம் முடிந்துவிடுகிறது. ஏசுவின் பெயரிலும் அக்கௌன்ட் திறக்கப்பட்டிருக்கிறது. எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லாவும் இந்த ஜாலி கேலி செய்பவர்களிடமிருந்து தப்பவில்லை.
பெரு நிறுவனங்கள் இந்த மனித குலத்துக்கு செய்யும் பேராபத்துகள் என சமூக செயற்பாட்டாளர்கள் பல ஆண்டுகளாக சொல்லி வரும் விஷயத்தை கையில் எடுத்து அடுத்த வில்லங்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.
image
அமெரிக்காவைச் சார்ந்த லாக்ஹீட் மார்ட்டின் விண்வெளி, இராணுவ ஆதரவு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். அந்த நிறுவனத்தின் பெயரில் புதிதாக ஒரு அக்கௌன்ட்டை ஆரம்பித்து, ” மனித உரிமை மீறல் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் வரையில் இனி அமெரிக்கா, சௌதி அரேபியா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு நாங்க எதையும் விற்கப்போவதில்லை” என தடாலடியாக ட்விட் செய்தார்கள். அந்த அக்கௌன்ட் முடக்கப்பட்டாலும், பங்கு வர்த்தகத்தில் ஐந்து சதவீதம் அளவுக்கு அதன் பங்குகள் வீழ்ந்தன.
image
கேமிங் நிறுவனமான Nintendo பெயரில் போலி அக்கௌண்ட் ஆரம்பித்து சூப்பர் மேரியோவின் புகைப்படத்தைப் போடுவது; டெஸ்லா பெயரில் போலி அக்கௌன்ட் ஆரம்பித்து, ” உலக வர்த்தக மையத்தை இரண்டாம் டெஸ்லா தாக்கியிருக்கிறது” என ட்விட் போடுவதென எல்லா குறும்புக்கார வேலைகளையும் செய்துவருகிறார்கள்.
image
மருந்து நிறுவனமான Eli Lilly இன்னும் வினோதமாக சிக்கிக்கொண்டது. இந்த நிறுவனத்தின் பெயரில் போலி அக்கௌன்ட் ஆரம்பித்து , ” இனி நாங்கள் இன்சுலினை இலவசமாக வழங்க இருக்கிறோம்” என யாரோ செய்துவிட பற்றிக்கொண்டது இணையம். அந்த ட்விட் போலியானது என மறுப்பு வெளியிட்டு வருத்தம் தெரிவித்தது Eli Lilly நிறுவனம். ” 1996ல் இருந்து இன்சுலினின் விலையை 1,200% மடங்கு அதிகரித்து அதில் கொள்ளை லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்சுலினை உருவாக்கியவர்கள் அதை 1 டாலருக்கு பேடண்ட் செய்ததே எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்கிற சேவை மனப்பான்மையினால் தான். எல்லி லில்லியின் சிஇஓவை கோடீஸ்வரர் ஆக்குவதற்காக அல்ல ” என காட்டமாக ட்விட் செய்தார் அமெரிக்க மூத்த அரசியல்வாதியான பெர்னி சாண்டர்ஸ். இன்சுலினை இலவசமாகத்தர வேண்டும் என்கிற குரல்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் வலுப்பெற துவங்கி இருக்கின்றன. பங்கு வர்த்தகத்தில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு எல்லி லில்லிக்கு நஷ்டம் ஏற்படலாம் என்கிறார்கள்.
image
எல்லோருக்கும் ப்ளூ டிக் என்கிற திட்டத்தை தற்காலிமாக நிறுத்தி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ட்விட்டர் எலான் மஸ்க்கிடம் சிக்கவில்லை, எலான் மஸ்க் தான் ட்விட்டர்வாசிகளிடம் சிக்கிவிட்டார் என்று தோன்றுகிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.