இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதியுடனும், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியுடனும் நிறைவடைகின்றன. பதவிக்காலம் முடிவடைவதற்கு அதிகபட்சம் 6 மாதகால அவகாசம் இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி.
அதன்படி, மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல், குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, அம்மாநிலத்தில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், குஜராத், இமாச்சலப் பிரதேச தேர்தலையொட்டி சுமார் ரூ.120 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே குஜராத்தில் ரூ. 71.88 கோடி மதிப்பிலான பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது ஒட்டுமொத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட ரூ. 27.21 கோடி பறிமுதல்களை விட அதிகமாகும்.
தேர்தல் ஆணையம்
இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் ரூ. 50.28 கோடி, தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட ரூ. 9.03 கோடியை விட இது ஐந்து மடங்கு அதிகமாகும். கடந்த 10அம் தேதி வரை குஜராத்தில் ரூ. 50.28 கோடியும், இமாச்சலப் பிரதேசத்தில் ரூ. 71.88 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், ரொக்கம், மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், விலையில்லா பொருட்கள் உள்ளிட்டவை அடங்கும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குடிமக்கள் விழிப்புடன் இருந்து சி விஜில் (cVigil) செயலியை பரவலாகப் பயன்படுத்தினால் தேர்தலின் போது பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது, அதேபோல், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற வியூகங்கள் வகுத்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.