முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனை கைதியாக சுமார் 30 ஆண்டு காலத்தை சிறையில் கழித்துள்ளார் முருகன். இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். வீட்டில் வைத்த பெயர், ஸ்ரீகரன். ஓர் அண்ணன், ஓர் அக்கா, மூன்று தம்பிகள், மூன்று தங்கைகள் என முருகனுடன் சேர்த்து அவரின் பெற்றோருக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள். 1987-ல் முருகனின் அண்ணன் புலிகள் அமைப்பில் சேர்ந்து, சண்டையில் கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் முருகனும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாக ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ, தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், “குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வெளிநாடு செல்லும் நோக்கத்துடனேயே முருகன் சென்னை வந்தார்” என, இவ்வழக்கில் முருகனுடன் சேர்ந்து கொலைச் சதியில் ஈடுபட்டதாக தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி நளினி, தான் எழுதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் தங்கியிருந்தார்கள். அப்படி போராளிகளுக்கு ஆதரவாக நின்ற இளைஞர் பட்டாளத்தில் என் தம்பி பாக்கியநாதனும் ஒருவன். சென்னையில் பிரபலமாக இருந்த சுபா சுந்தரம் போட்டோ ஸ்டூடியோவுக்கு பாக்கியநாதன் போய்வருவான். அங்குதான் பேரறிவாளன், ஹரிபாபு, முத்துராஜ் உள்ளிட்ட பலரும் புகைப்படக்கலை பயிற்சி கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படியான நண்பர்கள் பட்டியலில் புதிதாக வந்து சேர்ந்தவர்தான் தாஸ் என்ற முருகன்.
வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்காக அவரை அவரின் அப்பா, ஒரு ஏஜென்ஸியைப் பிடித்து படகு மூலம் தமிழகத்தின் வேதாரண்யத்துக்கு அனுப்பி வைத்துவிட்டார். அப்படி வேதாரண்யம் வந்த இடத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பிவைக்கும் ஏஜென்ட்டாக அறிமுகமாகியிருக்கிறார்.
வேதாரண்யத்திலிருந்து சென்னை வந்த தாஸ் தங்குவதற்கு ஓர் இடம் வேண்டும் என்று தம்பி பாக்கியாவிடம் பேசியிருக்கிறார். ‘வேறு வாடகை வீடு பார்த்துக்கொள்ளும் வரை என் வீட்டில் இருந்துகொள்’ என்று தாஸை வீட்டுக்கு அழைத்துவந்திருக்கிறான் தம்பி. 1991 பிப்ரவரி எட்டாம் தேதி முருகனை முதன்முதலாக சந்தித்தேன். ராயப்பேட்டையில் சபரி காலேஜ், தியாகராய நகரில் விவேகானந்தா காலேஜ் என இரண்டு டுடோரியல் கல்லூரிகளில் சேர்ந்து ஆங்கில வகுப்புக்கு தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல் போய்விடுவார் ” என நளினி தனது புத்தகத்தில் முருகன் யார் என்பதை விவரித்துள்ளார்.
இது தொடர்பாக முருகன், பல ஆண்டுகள் கழித்து தனது வழக்கறிஞர் மூலம் அளித்த பேட்டியில், “‘சிவராசன் மாஸ்டரை ( ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் முதன்மையானவர். பெங்களூரில் தலைமறைவாக இருந்தபோது சிபிஐ சுற்றிவளைத்ததால் தற்கொலை செய்துகொண்டவர்) ஒருநாள் பார்க்கப் போனேன். ‘இந்திய ராணுவத்தோடு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்ட முரண்பாட்டால், இங்குள்ள அரசியல் தலைவர்கள் பலரை நாம் பகைத்துக்கொள்ளும்படி ஆனது. ஆகவே, நல்லெண்ணத்தை வளர்க்க அவர்கள் வரும்போது மாலை அணிவிக்க தமிழ்ப் பெண் ஒருவர் வேண்டும்’ என்றார். எனக்கு தமிழகத்தில் தெரிந்த ஒரே பெண் நளினி மட்டும்தான். எங்கள் அமைப்பைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் சிவராசன் கேட்டார் என்று நளினியை அறிமுகம் செய்துவைத்தேன். எனக்கு அமைப்பால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலையும் மீறி, ஒரு மூத்த உறுப்பினரைச் சந்தித்து நளினியை அறிமுகம் செய்துவைத்தேன். நான் வாழ்க்கையில் செய்த ஒரே தவறு அதுதான்!
தனு, சுபா ( (ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள். இதில் தனுதான் மனிதவெடிகுண்டாக செயல்பட்டவர்) இருவரையும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார் நளினி. எனக்காக, என் மீதான காதலுக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அதைச் செய்தார் நளினி.
1991 ஆம் ஆண்டு மே 21 இரவு, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், அதிர்ச்சியும் குழப்பமும் சரிவிகிதத்தில் என்னைத் தாக்கின. இரவுகள், தூக்கத்தைத் தொலைத்தன. பகல்கள், கொடுந்துயர்மிக்கதாக மாறின. விடுதலைப் புலிகள், அவர்களின் ஆதரவாளர்கள் என அனைவரையும் தேடித் தேடி வேட்டையாடியது காவல் துறை. வெளியே தலைகாட்டவே இல்லை நாங்கள். ஆனால், ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஐந்து நாட்கள் கழித்து தனுவின் படம் வெளிவந்தபோது பீதியில் உறைந்துவிட்டோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் எங்கள் உலகத்தைச் சுருக்கியது. நளினியின் தம்பி பாக்கியநாதனை சி.பி.ஐ. அழைத்துச் சென்ற தகவல் தெரிந்து, நளினி வீட்டுக்கு நான் சென்றபோது அவரின் அம்மா என்னைத் திட்டினார்.
‘என் குடும்பத்தோட வாழ்க்கையையே நாசமாக்கிப் போட்டீங்களே’னு அழுதார். நான் மௌனமாக இருந்தேன். வேறென்ன சொல்ல முடியும்? அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்தார்கள். நான் அவர்களைச் சமாதானப்படுத்தி, தற்கொலை முடிவை நிறுத்தினேன்” என குறிப்பிட்டிருந்தார்.
நீண்ட கால சிறை வாழ்க்கை முருகனை மனதளவில் மிகவும் மாற்றிவிட்டது. நீண்ட தாடியுடன், காவி உடை, கழுத்தில் மணி மாலை அணிந்து சாமியாராக மாறி விட்டார். ‘ஜீவ சமாதி’ அடைய அனுமதிக்கக் கோரி கடந்த ஆண்டு முருகன் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டார்.
2013 ம் ஆண்டில் முருகன் அளித்த பேட்டில் ஒன்றில், விடுதலைக்குப் பிறகு என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு அவர், “நான் விடுதலையானால், ஒரு மலை உச்சியில் இடம் வாங்கி 100 பூச்செடிகளையும், மூலிகைகளையும் வளர்ப்பேன்” எனப் பதிலளித்தார்.
தற்போது பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தால் விடுதலை உத்தரவு பெறப்பட்டிருக்கிறது. சிறையில் வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர், அவர் இன்று விடுதலை செய்யப்படுவார் எனச் சொல்லப்படுகிறது!