வாஷிங்டன்,
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடர்ந்த போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. தூதரக பேச்சுவார்த்தை தோல்வி, பொருளாதார தடைகள் போன்றவைகளால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாத சூழலே நீடித்து வருகிறது.
ரஷியாவின் வருவாயை குறைக்கும் நோக்கில் புதிய யுக்தியாக, ரஷியாவின் எண்ணெய் விலைக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு நாடுகள் தள்ளப்படும்.
அதனால், ரஷியாவை புறக்கணிக்க கூடிய சூழல் ஏற்படும். வரம்பு நிர்ணயம் இந்த நோக்குடன் உள்ளபோதும், சூழல் இந்தியாவுக்கு சாதக நிலையை ஏற்படுத்தி உள்ளது.
ரஷியாவுடன் பன்னெடுங்கால உறவு கொண்டுள்ள இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு இந்திய மக்கள் தொகை ஒரு குறிப்பிடத்தக்க காரணம் என இந்திய தரப்பில் எடுத்து கூறப்பட்டு உள்ளது.
ரஷிய போரால் இந்தியா இறக்குமதி செய்யும் எரிபொருள் விலை உயர்ந்து உள்ளது என சமீபத்தில் பேசும்போது, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் குறிப்பிட்டார்.
இதுபோன்ற நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான பொருளாதார உறவு பற்றி அமெரிக்காவின் கஜானா செயலாளர் ஜேனட் எல்லன் கூறும்போது, ஐரோப்பிய யூனியன் தற்போதுள்ள விலையை விட கூடுதலான விலைக்கு எண்ணெய்யை வாங்கும் சூழலில், ரஷியாவிடம் இருந்து செய்யும் இறக்குமதியை நிறுத்தி விடும்.
அதன்பின், ரஷியாவால் அதிகளவில் எண்ணெய் விற்பனை செய்ய முடியாது. அதனால், ஏற்றுமதி செய்ய முடியாமல் ரஷியா திணறும் நிலை காணப்படும். வாங்குவதற்கு ஆளில்லாமல் அவர்களை தேடும் நிலைக்கு கொண்டு செல்லப்படும் என கூறினார்.
சீனாவை அடுத்து, ரஷியாவிடம் இருந்து அதிக கொள்முதல் செய்யும் மிக பெரிய நாடாக தற்போது இந்தியா அங்கம் வகிக்கின்றது.
இந்த விலை உச்ச வரம்பு நிர்ணயம், வளம் சார்ந்த ஜி7 ஜனநாயக நாடுகளால் விதிக்கப்பட உள்ளது. இதற்கு டிசம்பர் 5 காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவும் அதில் இணைய உள்ளது.
இந்த சூழலில், எண்ணெய்யை ரஷியா மலிவான விலைக்கு விற்பதற்கான நிலை ஏற்படும். அதனை பயன்படுத்தி கொண்டு இந்தியா குறைந்த விலையில் எண்ணெய்யை வாங்கினால் அது எங்களுக்கு மகிழ்ச்சியே. இந்தியா இல்லையென்றால் ஆப்பிரிக்கா அல்லது சீனா குறைவான விலைக்கு வாங்கினாலும் மகிழ்ச்சியே என எல்லன் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இந்தியாவில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனங்கள், அவர்கள் எவ்வளவு விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை கொள்முதல் செய்து கொள்ளலாம். மேற்கத்திய சேவைகளை பயன்படுத்தி கொள்ளாவிட்டாலும் ஒன்றுமில்லை. அல்லது வேறு சேவைகளை தேடி கொண்டாலும் ஒன்றுமில்லை. எந்த வழியானாலும் எங்களுக்கு ஏற்புடையதே என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற சூழலால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைய கூடிய சாத்தியம் காணப்படுகிறது. எனினும், வருங்கால எரிபொருள் விற்பனை சூழல் இந்தியாவில் எப்படி என்பது தற்போது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.