நடிகை சமந்தாவின் சினிமா கிராஃப் அண்மைக்காலமாக ஜெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. அவர் நடிப்பில் இப்போது வெளியாகியிருக்கும் யசோதா திரைப்படமும் ஹிட் அடித்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சமந்தா. பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே உருவான யசோதா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் படம் வெளியானது. ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த படக்குழுவினருக்கு, நல்ல ரிவ்யூகளே கிடைத்தன.
ஒரு மொழியில் மட்டுமல்லாமல் வெளியான அனைத்து மொழிகளிலும் யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான யசோதா, முதல் நாளில் 3.20 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான மொத்த பட்ஜெட்டே 40 கோடி ரூபாய் என்பதால், இன்னும் வரும் நாட்களில் இந்த வசூல் அதிகரிக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வாடகைத் தாய்மை பின்னணியில் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஹரிஹரிஷ் இயக்கியுள்ளார். வாடகைத்தாய் என்ற பெயரில் நடக்கும் குற்றங்கள் இந்தப் படத்தில் வெளிச்சம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. சமந்தாவுடன் இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உடல்நல பிரச்சனை காரணமாக படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா பங்கேற்காமல் இருந்த நிலையில், படம் ஹிட் அடித்திருப்பது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.