சிறுமி பலாத்கார, கொலை வழக்கில் வாட்ஸ்அப் செய்தியால் திருப்பம்… அசாம் முதல்-மந்திரி அதிரடி உத்தரவு

கவுகாத்தி,

அசாமில் தர்ராங் மாவட்டத்தில் மத்திய ஆயுத படையான சஹஸ்திர சீமாபால் வீரரின் வீட்டில் பணியாளாக வேலை செய்து வந்த 13 வயது பழங்குடியின சிறுமி 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார்.

இந்த வழக்கில் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு வாட்ஸ்அப் செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், சிறுமி மரணம் தற்கொலை அல்ல என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சிறுமியின் குடும்பத்தினரும் பலாத்காரம் செய்யப்பட்டு, சிறுமி கொல்லப்பட்டு உள்ளார் என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, வழக்கை விசாரிக்க சி.ஐ.டி.க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில், மத்திய ஆயுத படை வீரர் கிருஷ்ணா கமல் பருவா, வழக்கை மறைக்க உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தெரிய வந்தது.

சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, வழக்கில் லஞ்சம் பெற்றதற்காக தனி வழக்கு ஒன்றும் அரசு ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்டது.

இதனால், சஸ்பெண்டில் இருந்த போலீஸ் சூப்பிரெண்டு, சி.ஐ.டி. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். துலா காவல் நிலைய அதிகாரியும் சஸ்பெண்டானார். பிரேத பரிசோதனை செய்த 3 டாக்டர்கள், சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை என போலியான அறிக்கை தயாரித்து கொடுத்துள்ளனர். மாஜிஸ்திரேட்டும் போலியான அறிக்கை கொடுத்து உள்ளார். அவர்கள் 4 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

வழக்கில் கடந்த ஜூனில் கிருஷ்ண கமல் வீட்டில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர் போலீசாரும், குற்றவாளியான கிருஷ்ண கமலும், சிறுமி தற்கொலை செய்து விட்டார் என கூறி, பிரேத பரிசோதனை நடத்தி உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

போலீஸ் சூப்பிரெண்டு ராஜ் மோகன் ரே, இந்த வழக்கு பதிவானபோது, எஸ்.பி.யாக இருந்துள்ளார். அவரது வங்கி கணக்கு மற்றும் பிற ஆவண ஆய்வின்போது, ரூ.2 லட்சம் குற்றவாளியின் குடும்பத்தினரிடம் இருந்து பெற்றுள்ளது தெரிய வந்தது.

குற்றவாளியை காப்பாற்ற மற்றும் வழக்கை நீர்த்து போக செய்யும் நோக்கில், தனக்கு வேண்டிய பணம் பெற்றுள்ளார் என குற்றச்சாட்டு பதிவாகி, ராஜ் மீது தனி வழக்கு பதிவாகி உள்ளது.

இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, எனக்கு நிருபர் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி, குடும்பத்தினரின் குற்றச்சாட்டின் பேரில் சந்தேகம் அடைந்த நான், எஸ்.பி.யிடம் இருந்து அறிக்கை பெறும்படி எனது அலுவலக ஊழியர்களிடம் கேட்டு கொண்டேன்.

தீவிர விசாரணையில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அதனால், வழக்கை மறு விசாரணை நடத்தும்படி டி.ஜி.பி.யிடம் கூறினேன் என தெரிவித்து உள்ளார். வழக்கில் சி.ஐ.டி. அதிகாரிகளால், எஸ்.பி. உள்பட 3 அதிகாரிகள் மீது சஸ்பெண்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி சி.ஐ.டி. அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, மறுபிரேத பரிசோதனை, தடயவியல் சோதனை நடத்தி உள்ளோம். பாலியல் வன்கொடுமை பற்றி குடும்பத்தினரிடம் மற்றும் குற்றவாளியின் மனைவியிடம் கூறி விடுவேன் என சிறுமி மிரட்டியுள்ளார்.

இதனால், குற்றவாளி சிறுமியின் தலை மற்றும் கழுத்து மீது கடுமையாக தாக்கி, கழுத்து நெரித்து சிறுமியை உயிரிழக்க செய்துள்ளார். அதன்பின்பு, தற்கொலை போன்று உடலை தொங்க விட்டுள்ளார் என கூறியுள்ளனர். சி.ஐ.டி. விசாரணையில் சிறுமி தற்கொலைக்கான எந்த சாத்தியமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆயிரம் பக்க குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, அசாமில் கடந்த ஒரு வருடத்தில் நடந்த, இயற்கைக்கு மாறான வீட்டு பணியாளர் மரண வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்துவதற்கு அரசு அதிரடி முடிவு எடுத்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.