மும்பை: இந்துத்துவா தொடர்பாக பேசிய ஜேஎன்யு பல்கலைக்கழக முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பிரமுகருமான கண்ணய்யா குமார், ‘பாம்பு சிறிதோ, பெரிதோ அதன் விஷம் ஒன்றுதான்’ என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தற்போது மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவருடன் யாத்திரையில் இணைந்த கண்ணய்யா குமார், செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அவர் அப்போது கூறியது: “இந்துத்துவா என்பது ஃபேர் அண்ட் லவ்லி க்ரீம் போன்றது அல்ல. குளிர்காலம் வந்தால் உதட்டிற்கும், பாதங்களுக்கும் வெவ்வேறு க்ரீம் தேவைப்படும். இந்துத்துவா என்பது ஒரு முறையான சித்தாந்தம். அது ஓர் அரசியல் சித்தாந்தம். உங்கள் ஊரின் (மகாராஷ்டிராவின்) சாவர்க்கர் எழுத்துகளைப் படித்தால் அது உங்களுக்குப் புரியும்.
இன்று வாட்ஸ்அப்களில் மிதமான இந்துத்துவா, தீவிரமான இந்துத்துவா என்றெல்லாம் பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை விஷம் என்றால் அது விஷம்தான். ஒரு விஷப் பாம்பின் வீரியம் அதன் அளவைப் பொறுத்து மாறப்போவதில்லை.
அதேவேளையில் இந்து மதத்தை அவமதிக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். மதத்தின் பெயரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிந்தனைதான் ஆபத்தானது. அவ்வறாக உருவாக்கப்பட்டு மக்களை மக்களுக்கு எதிராக திருப்பும் எந்த மதமும் மதமே இல்லை. ஏனெனில், மதத்தின் உண்மையான இலக்கு மனித குலத்திற்கு விடுதலை நல்குவது.
ராகுல் காந்தி கோயிலுக்குச் சென்றதை வைத்துக் கேள்வி எழுப்புவதை எல்லாம் நான் பார்வைக் கோளாறு என்பேன். நான் கேரளாவில் கோயிலுக்குச் சென்றால் அது செய்தியாகிறது. அதுவே நான் குருத்வாராவுக்கு சென்றால் அது செய்தியல்ல. ராகுல் காந்தி கோயில், மசூதி, தேவாலயம், குருத்வாரா என எல்லாவற்றிற்கும் செல்கிறார். பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கும் செல்கிறார். எங்களுக்கு எல்லா இடங்களும் ஒன்றுதான. ஏன் நாங்கள் யாத்திரை மேற்கொள்ளும் சாலையும் கூட எங்களுக்கு புனிதமானது தான்.
இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வாழ முடியாது என்றது முஸ்லிம் லீக். இந்து மகாசபையும் அதைத்தான் சொன்னது. ஆனால் அவர்கள் இருவரும் எப்படி அரசியல் கூட்டணி அமைத்தனர். மதத்தின் பேரில் அரசியல் செய்தவர்களின் பேச்சைக் கேட்டுப் பாருங்கள், மோடி பேசுவதெல்லாம் சரி என்று தோன்றும். அவர்களுக்கும், மோடிக்குமான வித்தியாசம் ஆடை மட்டும்தான். விஷம் ஒன்றே. இவர்கள் அனைவரும் மக்களை பிரித்தாள நினைக்கின்றனர். மக்கள் இதில் மாட்டிக் கொள்ளக் கூடாது” என்று கண்ணய்யா குமார் பேசினார்.